விடுதலைப் புலிகளும் இலங்கை பிரஜைகளே..! மாவீரர் தினம் கொண்டாடுவதில் என்ன தவறு?

ltteவிடுதலைப்புலிகளும் இலங்கையின் பிரஜைகளே. எனவே, அவர்கள் உயிர்நீத்த தினத்தை மாவீரர் தினமாக அனுஷ்டிப்பதில் எந்தத் தவறும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளருமான சண்.குகவரதன் இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கும் ஜே.வி.பியினருக்கும் உள்ள உரிமை அந்தப் போராளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் பொலிஸாரும் யுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராளிகளும் கொல்லப்பட்டனர். அதேபோன்று பொதுமக்களும் கொல்லப்பட்டனர். சொத்துக்களும் அழிந்தன. இது மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.

படையினர் ஓர் இலக்குக்காகவே போரிட்டனர். ஆனால், மரணமடைந்த படையினருக்காக வடக்கு, கிழக்கில் நினைவுத் தூபிகள் நிறுவப்பட்டு நாடு முழுவதும் தீபமேற்றி அவர்களது மரணங்கள் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.

அதேபோன்று நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டு, கல்விமான்களை, அரசியல்வாதிகளை, மக்களை, ஜே.வி.பியினர் கொலை செய்தனர். இதில் ஜே.வி.பியினரும் மரணித்தனர்.

ஆனால், இன்று ஜே.வி.பியினர் இறந்த நாள் ‘கார்த்திகை வீரர்கள் தினம்’ தீபமேற்றி அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் போராளிகளும் தமிழ் மக்களும் யுத்தத்தில் மரணித்ததை அனுஷ்டிக்கபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு தென்பகுதி சிங்களவர்கள் மத்தியில் பிழையான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்?

போராளிகளும் தமிழ் மக்களும் இலங்கைப் பிரஜைகளே.

அவர்களும் இலங்கை பெற்றோர்களின் பிள்ளைகள். அத்தோடு அவர்களும் ஓர் இலக்கை முன்வைத்து

போராடியவர்கள். அப்படியெனில் ஏன் இத் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது.

இவ்வாறு தடை விதிப்பது மறைமுகமாக அனுஷ்டிப்பதற்கு ஊக்கமளிப்பதாக அமைவதோடு தமிழ், சிங்கள மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளையும் பாதிக்கும்.

போராளிகள், தமிழர்கள் எனப் பிரிப்பதால் அவர்கள் இலங்கையர் அல்ல என்ற தோற்றப்பாட்டையே மேலும் வலுப்படுத்தும். ஏன் இவ்வாறு பிரிக்கவேண்டும்.

இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே என்ற எண்ணம் அனைவர் மத்தியில் ஏற்படவேண்டும். மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதில் இலங்கைக்கு பாதிப்பில்லை.

இதற்கு இனவாதிகள் புலி முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனங்களிடையே நல்லிணக்கம் தேவையெனில் போராளிகளும், தமிழர்களும் இலங்கையர்கள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: