இப்போதைய அரசியல் சூழலுக்கு அமைய தேரர்களும் தம் பங்கிற்கு புதிய ஆட்சி ஒன்றினை அமைக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதே போன்று எந்த வகையிலும் இந்த புதிய அரசியல் யாப்பினை உருவாக்க சிங்கள தரப்பு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என தேரர்கள் மூலமாக அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் அழைப்பு விடும் காணொளியினை வெளியிட்டுள்ள ஜுனாநன்த ஹிமி தெரிவித்துள்ளதாவது, காணொளியை பார்க்க இங்கே அழுத்தவும்
நாட்டைப்பற்றியும் சிங்களம் மீதான அக்கறையும் பற்றும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரளுங்கள், இப்போது நாட்டில் இடம் பெற்று வரும் சதி தொடர்பில் நன்றாக கவனம் எடுங்கள்.
பிரதமர் ரணில், மங்கள சமரவீர போன்றோர் இப்போது நாட்டை பிளவு செய்ய திட்டம் தீட்டுகின்றார்கள், அவர்களுக்கு வேண்டியது புலிகளை மீண்டும் உருவாக்கி தனி ஈழம் ஒன்றை அமைத்து கொடுப்பது மட்டுமே.
சந்திரிக்கா, ரணில், மங்கள, ஜயம்பதி விக்ரமரத்ன போன்ற அனைவருமே புலிகளுக்கு ஆதரவானவர்கள் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாட்டை பிரித்துக் கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்.
இப்போதைய ஆட்சியின் மூலமாக இதனை எளிதாக சாதித்து கொள்ள நினைக்கின்றனர் அதனை எதிர்க்க நாம் தயாராக வேண்டும்.
அதற்கான காலம் குறைவாகவே இருக்கின்றது ஜனவரி 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் அதன் பின்னர் மூன்றில் இரு பங்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விடும்.
ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி உண்மையான சிங்களத் தாயிடம் பிறந்த பிறப்பு எனில் இதனை ஒரு போதும் நிறைவேற்ற இடம் கொடுக்கக் கூடாது.
பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இது பற்றி தெளிவு படுத்த வேண்டியது அனைத்து மக்களின் பொறுப்பு, அவர்களுக்கு எப்படி புரியவைக்க வேண்டுமோ அப்படி புரிய வையுங்கள்.
புலிகள் செய்ய நினைத்ததையே இப்போது புலிகளுக்கு ஆதரவான ரணில் செய்ய நினைக்கின்றார் இந்த யாப்பு மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டால் சிங்கள தேசம் இனி கிடைக்காது கலவரங்கள் ஏற்படும்.
எனவே ஒரு தாயை கூறுபோட்டு பிரித்துக் கொடுக்கும் இந்த செயலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் எனவே ஆயத்தமாகுங்கள் அணி திரளுங்கள்.
ரணில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார், அவர் நாட்டை பிளவு படுத்துகின்றார் அவருக்கும், ஆட்சிக்கும் எதிராக நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் செய்ய வேண்டும்.
இவை ஜுனாநன்த ஹிமி தெரிவித்துள்ள வார்த்தைகள், இவை பிக்குகளையே நம்பியுள்ள சிங்கள மக்களிடையே எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அடுத்து ஏற்கனவே இனவாதச் சிக்கலில் சிக்கி உள்ள மட்டக்களப்பு சுமனரத்ன தேரர் நேற்று வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளதாவது, காணொளியை பார்க்க இங்கே அழுத்தவும்
அழிக்கப்படும் பௌத்தத்திற்காக குரல் கொடுத்தமைக்கு எனக்கு பயங்கரமான உயிர் அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் துயரை போக்க அனைத்து சிங்களவர்களும் ஒன்று திரண்டு 3ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வருவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
இப்போது வடக்கில் விகாரைகள் எழுப்பக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனாலும் எங்களுக்கு பணம் மட்டும் இருந்தால் இவற்றை சமாளிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.
ஏனைய இனத்தவர்களுக்கு கனடா, அவுஸ்ரேலியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து பணம் வந்து சேர்கின்றது அதன் மூலம் அவர்கள் தம்மை பலப்படுத்தி வருகின்றார்கள்.
இதனைப்பார்க்கும் உலகம் முழுதும் உள்ள சிங்கள இனத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு இப்போது இருக்கும் நிலையில் எமக்கு வருகின்றவற்றை பாதுகாப்பாக செய்ய வேண்டியதும் முக்கியமான ஒன்றாகும் என்பதையும் கருத்திற் கொள்ளுங்கள்.
நாம் பொறுமையாக இருப்போமானால் நாம் அடக்கப்பட்டு அழிக்கப்படுவது நிச்சயம் எனவே அனைவும் ஒன்று திரளுங்கள் என்றவாறு சுமனரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவற்றின் மூலம் இரு விடயங்கள் தெளிவாகின்றதான அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர், அதாவது ஒன்று புதிய அரசியல் யாப்பிற்கு அனைத்து சிங்களவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அடுத்தது சிறுபான்மை இனத்தை அடக்க சர்வதேச அளவில் இருக்கும் பௌத்தர்களிடம் நிதி உதவி கோரப்படுகின்றது என்பதே.
அதன் படி இப்போதைய ஆட்சியாளர்களின் மீதும் நம்பிக்கை இல்லை, முன்னாள் ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லை எனும் போது அனைத்து சிங்கள மக்களையும் ஒன்று திரட்டி பிக்குகள் ஆட்சியமைக்க திட்டம் தீட்டுகின்றார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது ஞானசார தேரர் அண்மையில் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து,
மஹிந்தவானாலும் சரி, மைத்திரி ரணிலாக இருந்தாலும் சரி பௌத்தத்தை காப்பதற்காக மட்டும் செயற்படுங்கள் இல்லாவிடின் அதனை நாம் செய்வோம் என ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறாயினும் அடுத்ததாக தேரர்கள் ஆட்சிக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் பாரிய அளவில் ஒன்று திரண்டு கலவரங்களில் ஈடுபடுவதற்கான முயற்சியினை ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளோடு தற்போது நிதியும் சேகரிக்கப்படுகின்றது.
தமிழர்களை புலிகள் என்றும், முஸ்லிம்களை தீவிரவாதிகள் எனவும் சித்தரித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க பௌத்த அமைப்புகள் திட்டம் தீட்டி வருவதாகவும் தென்னிலங்கை புத்தி ஜுவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com