உச்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரம்: டிரம்ப் காப்பாற்றுவாரா? வல்லுனர்கள் கூறுவது என்ன?

001அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதியாக உள்ள ஒபாமாவின் முக்கிய செயல்பாடுகளால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வரலாறு காணாத அளவுக்கு 4.6 சதவீதமாக உள்ளது என்றும் 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக இந்த அளவுக்கு குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 78 ஆயிரம் பேர் புதிய வேலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அமெரிக்காவில் பொருளாதார நிலை வலுவான நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவம், கட்டுமானம், அரசு , வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகம் உருவாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் ஆட்சி காலத்தின் இறுதியில் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்தனர்.

உற்பத்தி துறை நிறுவனங்கள் பெரும்பாலானாவை மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, தொழிற்சாலைகளை மாற்றின.

வீட்டுக் கடன் பிரச்சனைகளால் வங்கிகள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக கார் உற்பத்தி நிறுவனங்களும் கடும் பின்னடைவைச் சந்தித்தன, மற்ற துறைகளிலும் மந்த நிலை ஏற்பட்டு கடுமையான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது.

அப்போது வங்கிகளுக்கும் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஒபாமா அரசு உதவியதால், இரு துறைகளும் விரைவில் எழுச்சி கண்டன.

மேலும் பல நடவடிக்கைகளால் பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார் ஒபாமா.

அதன் பயனாகாவே தற்போது வலுவான நிலையில் அமெரிக்க பொருளாதாரம் உள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை வல்லுனர்கள் புதிய ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி ஒபாமா கொடுத்துள்ள பரிசு என்றே கூறுகின்றனர்.

கடுமையான நடவடிக்கைகள் மூலம் உற்பத்தி நிறுவனங்களை அயல் நாடுகளுக்கு இடம் பெயராமல் தடுப்பேன் என்று சூளுரைத்து ஆட்சியைப் பிடித்துள்ளார் டிரம்ப்.

மேலும் குடியேற்றச் சட்டத்திலும் சீர்திருத்தம் கொண்டுவருவதும் அவரது முக்கிய லட்சியம் ஆகும். சட்டபூர்வமற்றவர்களை வெளியேற்றுவது, குடியேற்றச் சட்டத்தை கடுமையாக்கி புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்று பல திட்டங்களை டிரம்ப் முன் வைத்துள்ளார்.

குறிப்பாக ஹெச் 1 விசா, மற்றும் க்ரீன் கார்டு விண்ணப்பங்களில் முறைகேடுகள் நடப்பதை நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறினார்.

இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள புதிய தலைமுறைகளுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பியுள்ளார்.

மேலும் தற்போது உள்ள அமெரிக்கர்களின் மனதில் ஒபாமா விட்டுச்செல்லும் வலுவான பொருளாதார நிலையை டிரம்ப் மேலும் வளப்படுத்துவாரா அல்லது அவரின் கொள்கைகள் எதிர்மறையாக மாறுமா என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

-http://news.lankasri.com