ஜெயலலிதாவின் மறைவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இரங்கல் செய்தி

Logo-LTTEதமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரிலாழ்ந்த தமிழ்மக்களுடன் எமது இயக்கமும் இணைந்து கொள்கின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் அரசியலில் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் விமர்சனங்களைக் கடந்தும் முக்கிய பெண் ஆளுமையாகத் திகழ்ந்தார்.

ஒப்பீட்டளவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத அரசியல் தளத்தில், தனக்கு ஏற்பட்ட தடைகளையும் சோதனைகளையும் தாண்டி அசைக்க முடியாத தனித்த ஆளுமையாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்ட அவரின் மனவலிமையும் போராட்ட குணமும் அவரை தவிர்க்கவியலா முன்மாதிரியாகவே வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.

செல்வி ஜெயலலிதா அவர்கள் எமது இயக்கம் தொடர்பிலும் விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் பாதகமான நிலைப்பாட்டோடு இருந்துவந்தார் என்ற போதும்கூட, பின்வந்த காலப்பகுதியில் – குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவின் பிற்பட்ட காலப்பகுதியில் தனது நிலைப்பாட்டை சரியான வழியில் மாற்றியதோடு அம்மாற்றத்தின்வழி உறுதியாகவும் நின்றார்.

குறிப்பிட்ட சில விடயங்களில் அவரின் நிலைப்பாடும் செயற்பாடும் எமது மக்களின் விடுதலை வேள்விக்கு உறுதுணையாய் என்றும் நிற்கும்.

தேவைப்படும் போதெல்லாம் ஈழத் தமிழருக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு மட்டும் நின்றுவிடாது மிகத் துணிவாக தமிழீழத் தாயகத்துக்கான பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென்றும், ஈழத்தில் நடந்தது இனவழிப்பே என்றும் கூறி ஈழத்தமிழருக்குத் தமிழீழமே தீர்வு என தீர்மானம் நிறைவேற்றிய பெருமைக்குரியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

எமது மக்களின் அரசியல் வேட்கையை மலினப்படுத்தி நீர்த்துப்போகச் செய்ய பன்னாட்டுத் தளத்தில் வலை பின்னப்பட்ட மிக முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் வெளிவந்த இவரின் அந்தச் சட்டமன்றத் தீர்மானமானது எமது மக்களின் விடுதலைப் பயணத்தில் ஒரு மைற்கல் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதெல்லாம் சமயோசிதமாகவும் துணிச்சலோடும் செயற்பட்டவர்களுள் செல்வி ஜெயலலிதா அவர்களும் ஒருவர்.

இந்த நேரத்தில் அவரின் பிரிவால் வாடும் தமிழக மக்களுக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் மற்றும் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-http://www.tamilwin.com

 

TAGS: