இந்திய மலேசிய இலக்கியவாதிகள் யாழ். இலக்கியவாதிகளுடன் விஷேட சந்திப்பு

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வருகை தந்த இந்திய மற்றும் மலேசிய நாட்டு அறிஞர்கள்முப்பத்தைத்து பேர் கொண்ட குழுவினர் இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர்.

இவர்களுக்கான வரவேற்பு வைபவமும் யாழ். இலக்கிய ஆர்வலர்களுடனான சந்திப்பும் நல்லூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக மறைந்த ஈழத்து ஆக்க இலக்கியவாதிகளான கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி, மற்றும் செஞ்சொற் செல்வர்கலாநிதி ஆறு.திருமுருகனின் தாயார் சரஸ்வதி ஆறுமுகம் ஆகியோரது ஆத்ம சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌனப்பிரார்த்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கருத்துரைத்த பேராசிரியர் சிவலிங்கராஜா நாம் இனத்தால், மதத்தால், தேசத்தால் நாம் வேறுபட்டிருப்பினும் தமிழால் இணைந்திருக்கின்றோம். தமிழின் பெயரால் நாம்ஒற்றுமையாக வாழ்வோம்

மேலும் எங்கள் மண்ணின் தாகங்களை ஏக்கங்களைச் சுமந்து செல்லுங்கள். உங்கள் ஊர்களில் எங்கள் கதைகளைச் சொல்லுங்கள். இங்கு தமிழ் வாழ்வு பெற்றால் உலகில் தமிழ் உன்னத நிலையில் வாழும்.

சீறாப்புராணம் எழுதுவதற்கு எழுத்தாணி வழங்கியது யாழ்ப்பாணமே என்று தெரிவித்ததுடன் கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் இலங்கையில் உள்ள கவிதைகள் பற்றியும் கவிஞர்கள் பற்றியும் கருத்துரைத்தார். இலங்கைக் கவிதைகள் பெருமை மிக்கவை எனத் தெரிவித்ததுடன் அவற்றுள் கிழக்கிலங்கை இஸ்லாமியக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், உலகளாவிய நிலையில் தமிழை உயர்த்த வேண்டும் என்றும் உலக நிலையில் தமிழ் மொழி வாழ்த்து ஆக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்தமிழகத்தில் தமிழ் ஊடகங்கள் கட்சி சார்ந்து இயங்குகின்றன.

அத்துடன் அவற்றின் மொழிப்பிரயோகம் தமிழைத் தரம் தாழ்த்துவதாக அமைகின்றது. இந்த ஊடகங்கள் எம்மவர்களிடையேயும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

இவற்றிற்கெதிராகப் போராட வேண்டிய நிலையில் நாமிருக்கின்றோம் என்றார். இதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாநாட்டு வருகையாளர் யாவரும் கருத்துக்களை வழங்கினர்.

யாழ். மண்ணில் தாம் கால்மிதித்தமை தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டதுடன் இலக்கிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இந்திய மற்றும் மலேசிய நாட்டு அறிஞர்கள் குழுவில் கல்லூரிப் பேராசிரியர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள், கவிதையாளர்கள், கட்டுரையாளர்கள், நாவலாசிரியர்கள்,சிறுகதையாசிரியர்கள், குறும்பட இயக்குநர்கள், திரைப்படப் பாடலாசிரியர்கள் எனப் பலர் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

-http://www.tamilwin.com

TAGS: