2017ம் ஆண்டு வடமாகாணத்தில் போதைப் பொருள்பாவனை மற்றும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் – சிவில் பாதுகாப்புகுழுவினை அமைப்பதற்கான முயற்சிகள் 2015ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டபோதும் 2016 ஆண்டிலேயே இம்முயற்சி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தக் குழுவினை அமைப்பதற்கான கருத்தாவணம் எம்மால் தயாரிக்கப்பட்டு பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மாஅதிபர் ஆகியோரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையிலேயே இக்குழுவின் முதலாவது கூட்டம் இவ்வருடம் வைகாசி மாதத்தில் நடைபெற்றது.
பொலிசாருடன் தொடர்பில் இருந்தாலும் அடுத்த கூட்டங்கள் பல காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு வந்துள்ளன. விரைவில் வரும் வருடத்தில் இக்குழு கூடும்.
இக்குழுவின் இலக்குப் பரப்பினுள் சட்டம், மற்றும் சமாதானம் என்பனவற்றை செயற்படுத்துதற்கான பொதுவான விடயங்களும்,
மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் போதைப்பொருள் பாவனை, பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், களவு, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான முன்னேற்றப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/-Sin2NselTY?list=PLXDiYKtPlR7MUxdf4XrsKOZHRjdZbzgwo