மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ விமானம் புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் ராடர் கருவியின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் குழுவினர் பலியாகியுள்ளதால் ரஷ்யாவில் பரபரப்பு நிலவி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ விமானம் டியு-154. இது சோச்சி என்ற விமான தளத்தில் இருந்து 91 பயணிகளுடன் புறப்பட்டது. சிரியாவில் உள்ள லடாகியா என்ற இடத்தை நோக்கி மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5. 20க்கு விமானம் மேலெழுந்து பறக்கத் தொடங்கியது.
பின்னர், சரியாக 20 நிமிடம் கழித்து விமானம் 5.40 மணிக்கு விமானத்தின் தொடர்பு ராடர் கருவியில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் விமானக் குழுவினரின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில், இந்த விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இதில் பயணம் செய்த 91 பேருடன் விமானக் குழுவினர் 8 பேரும் மடிந்துள்ளனர். ரஷ்ய ராணுவ விமானம் டியு-154 நொறுங்கி விழுந்து 91 பேர் பலியாகியுள்ளது ரஷ்யாவில் பரபரப்பு நிலவி வருகிறது.