பிரபாகரன் தொடர்பான இராஜாங்க அமைச்சரின் கருத்தை விமர்சிக்கும் அரசியல்வாதிகள்

Vijayakalaவிடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ தகுதியானவராக இருப்பார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்து அரசியல் ரீதியான குழந்தைத்தனமான பேச்சு என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விஜயகலாவின் விசர்த்தமான செயற்பாடுகள் இது ஒரு பகுதி எனவும் அவர் தனது பிரபலத்தை தற்காத்து கொள்ள இப்படியான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே ராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்தை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை எனவும் அது முட்டாள் தனமாக கருத்து எனவும் இதனை பயன்படுத்தி இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல்களை உருவாக்கிக்கொள்ளக் கூடாது எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேவவேளை பயங்கரவாத தலைவர் ஒருவர் இந்த நாட்டின் பதவிகளை வகிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரபாகரனின் மறைவுக்கு பின்னர் தமிழ் மக்கள் அனாதரவான நிலைமையில் இருப்பதாகவும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

-http://www.tamilwin.com

TAGS: