சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: 56 கைதிகள் பலி

brazilபிரேசில் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் 56 கைதிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amazonas மாகாண தலைநகரான Manaus நகரில் உள்ள Compaj சிறைச்சாலையில் தான் இந்த பயங்கர கலவரம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து 17 மணி நேரங்கள் நீடித்துள்ளது.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கும் உள்ளூர் கைதிகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கலவரத்தை தொடர்ந்து சிறைக்காவலர்களில் 12 பேர் கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

பின்னர், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் சில கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டும், சிலர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.

சிறைச்சாலையை தங்களது அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்காகவும், கடத்தல் பொருள்களை கொண்டு செல்ல வழிகளை உருவாக்கும் முயற்சியில் இந்த கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இக்கலவரத்தில் பலர் சிறைச்சாலையை விட்டு தப்பியுள்ளனர். கலவரத்தில் படுகாயம் அடைந்த சில கைதிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சர்வதேச அளவில் குற்றங்கள் அதிகளவில் நிகழும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் முதல் இடம் வகித்து வருவதுடன், இங்குள்ள சிறைச்சாலைகளிலும் அதிகளவில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கடந்த 1992-ம் ஆண்டு Carandiru சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் 111 கைதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com