முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிற நம்பிக்கையை ‘கொழும்புப் பேச்சுக்கள்’ வழங்கியிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் எல்லை மீறலைத் தடுக்கும் நோக்கில் இரு தரப்பு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றும் (ஹொட்லைன்) அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினருக்கும், அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான இலங்கைக் குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய பேச்சுவார்த்தையில் இலங்கைத் தரப்பில் அமைச்சர் அமரவீரவுடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, கடற்படை அதிகாரிகள், மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 15 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
நவம்பர் மாதம் புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியதற்கு அமைய படிப்படியாக இழுவைமடி வலை (பொட்டம் ட்ரோலிங்) முறையைக் குறைப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இந்தியக் குழுவினர் தெரிவித்தனர்.
இழுவைமடி வலை தொழிலில் ஈடுபட்டிருந்த 92 படகுகள் மாற்று முறைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், எல்லைதாண்டிய மீன்பிடியை தடுக்க இரு நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் கொழும்பு பேச்சுவார்த்தையில் மீண்டும் இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சுமார் 30 வருடங்களாகத் தொடரும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகண்டுவிட முடியாது. அடுத்த கட்டமாக இணைந்த செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தியாவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வொன்றைக் காண்பதற்கே எதிர்பார்த்துள்ளதாகவும்” அமைச்சர் தெரிவித்தார். இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய படகுகளை கைப்பற்றி மீண்டும் வழங்காதுள்ளோம். இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பரப்பைவிட அதிகளவான படகுகளைக் கைப்பற்றியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்து இந்தியத் தரப்பில் தொடர்ந்தும் கோரிக்கை விடுப்பட்டுவருவதால், இணைந்த செயற்குழுவின் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இக்கோரிக்கை குறித்து கவனம் செலுத்த இணங்கியதாக, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், படகுகள் பற்றி எதிர்வரும் காலத்தில் கவனம் செலுத்தப்படும் என்றார். இழுவைமடி வலை முறைக்குப் பதிலாக மாற்று முறையை அமுல்படுத்துவது பற்றி இந்தியத் தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை பேச்சுவார்த்தையில் தமக்குத் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கடல் எல்லையை மீறி நுழையும் படகுகளைத் தடுக்கும் நோக்கில் இரு நாட்டு கரையோர பாதுகாப்புத் தரப்பினரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு நேற்றைய கொழும்புப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றும் இரு தரப்புக்குமிடையில் பரிமாறப்பட்டுள்ளது.
-http://www.puthinamnews.com