கனடா நோக்கிய விக்னேஸ்வரனும் கலக்கத்தில் தமிழரசும் – ஆருத்ரன்

vikneswaran01இந்த வாரம் இலங்கைத் தீவு தீர்மானம் மிக்க பல நிகழ்வுகளை முகங்கொடுக்கின்றது என்றால் மிகையாகாது.

அந்த வகையில் ஒரு சம்பவத்தினை மாத்திரம் நாம் அலசுவோம். ‘வடக்குமாகாண முதல்வர் விக்னேஸ்வரனது கனேடியப் பயணமும் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளகத்தின் தாக்கங்களும்’

கனேடிய தமிழ்ச் சமூகம் என்ற அமைப்பு அனைத்து ஈழத்தமிழ் உறவுகளது அமைப்புக்களையும் ஒன்றிணைத்து இந்த நிகழ்வினைத் திட்டமிட்டிருக்கின்றது. தமிழீழத்தில் விடுதலைப்போராட்டம் 2009 வரை நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் லண்டனை மையப்படுத்திய ஐரோப்பிய உலகே பெரும்பங்காற்றியிருந்தது.

2009 விடுதலைப்புலிகளின் அடங்கலுக்கு பின்னரான அரசியல் களத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தி தமிழரசுக் கட்சிக்காரர்களாலும் காங்கிரஸ் காரராலும் கனடா நோக்கிய மென்களத்தினை நகர்த்தி வைத்துள்ளனர். இதற்கான காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளது போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்தகாலம் அல்லது அதன் தொடக்க காலத்தில் அரசியலில் ஈடுபட்ட மேல்த்தட்டு தமிழ் அரசியல்வாதிகளின் கனடா நோக்கிய புலப்பெயர்வும் தமிழீழ விடுதலைப்புலிகளது அரசகொள்கை எதிர்ப்பும் அல்லது தவிர்ப்பும் என்றும் சொல்லலாம்.

2009 இல் யுத்தம் முடிவுற்றதையும் தங்களது மிதவாத சிந்தாந்தங்களின் ஆருடங்கள் மிகச்சரியானதொரு நிறுவலைத்தந்திருக்கின்றன என்றதொரு எடுமானத்திலேயே தமிழர்களது அரசியல்க்களம் ஈழத்தில் நகர்த்தப்பட்டுவருகின்றது. ஐரோப்பிய தேசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானதாகவும் தமிழர்களது போராட்ட அர்த்தத்தினை வன்போக்கு சித்தாந்தங்களை ஆதரித்ததன் ஊடாகவும் அர்த்தமுள்ள ஏற்றுக்கொள்கைகளை உடையனவாகவும் கடந்தகாலங்களில் தனது வரலாற்றினை பதிவிடடிருக்கின்றது. மாறாக கனேடிய தேசம் தமிழர்களது இனப்பிரச்சினையில் 2009 இல் இருந்து மென்போக்கு சித்தாந்தங்களை உடையனவாகவும் ஈழத்து நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் சக்திகளாகவும் கருத்துக்களை திணிக்கும் கட்டமைப்பினை உடையனவாகவும் பெரும்பாலும் தன்னை நிறுவி வருகின்றது.

பொருளுடமை தத்துவத்தின் கீழ் ஈழத்தில் தழிழ் தேசியக்கூட்டமைப்பு அத்திவாரம் அற்ற பூச்சிய நிலையிலேயே காணப்பட்டு வருகின்றது. இதன் நோக்கங்கள் அமைப்புக்கள் இணைப்புக்கள் அனைத்தும் கொள்கை அளவிலானவைகள் கருத்துருக்கள் மட்டுமே. எந்தவகையிலானதொரு பௌதீகத்திற்கும் உட்படுத்தப்படாதது உருவாக்கப்படாதது. தேர்தல்கள் மற்றும் தேவைகள் நிதி சார்ந்தவைகளாக எழும்பொழுது தீவிற்கு வெளியே உள்ள அமைப்புக்களையே நம்பவேண்டிய தேவைகளில் நிர்பந்திக்கப்படுகின்றபொழுது இன்றைய காலத்தில் வாழும் பெரும்பான்மைத் தமிழ் அரசியல்வாதிகளை ஐரோப்பா சார் ஆதரவுக்குழுக்களும் அமைப்புக்களும் ஏற்க மறுக்கின்றார்கள் அல்லது பின்னடிக்கின்றார்கள் என்பதே உண்மை விடுதலைப்புலிகளது போராட்ட காலத்தில் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளது அன்றைய நடவடிக்கைகள் அனைவராலும் அவதானிக்கப்பட்டதன் விளைவே இன்று வினையாகின்றது.

இலங்கைத்தீவின் தேர்தல்கள் முறைமைகள் என்னவோ தற்காலத்தில் ஜனநாயகமாக இருந்தாலும் தமிழ்த்தேசியத்தின் கட்சிகளுக்குள் இருந்து வெளிவரும் வேட்பாளர்கள் யார் என்பதை தீரமானிப்பதற்கு எந்தவிதமான ஜனநாயகமோ மக்கள் விருப்புக்களோ கட்சி இணைப்பிற்குரித்தான நிலையியலின் பிரகாரமோ யாரும் பெற்றுக்கொள்வதில்லை. இன்று தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ்த்தேசியத்தினைப் பொறுத்தவரையில் தீவிற்கு வெளியேதான் இருக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் சிறப்பான தெரிவுகளாகவும் பல சந்தர்ப்பங்களில் சொதப்பலான தெரிவுகளாகவும் அமைந்துவிடுகின்றன இது 2009 க்கு பின்னரான அரசியலிலும் அண்மைய நாட்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்னர் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் இத் தேர்வுகளின் பின்னரான நடவடிக்கைகளில் காணப்படும் உள்ளக இசைவுகளிலும் மிகத் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இனிவரும் என எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி தேர்தல்களையும் எதிர்வுகூறலாம். 2009 க்கு பின்னரான தேர்தல்களில் கனடாவின் நிதிப்பங்களிப்பினையும் அதன் பங்களிப்பு ஊடகங்களையும் (கையாண்ட இலங்கைத் தமிழ் அரசியல்கட்சிகள், வாதிகள்) அறிக்கைப்படுத்துவது இந்தத் தருணத்தில் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

இவ்வாறானதொரு சூழலில் வடமாகாண வதிவிடமக்களால் வரலாறாக்கப்பட்ட வாக்களிப்பில் நிறைந்தவரும் தமிழ்த் தேசிய இனவாதியாக இலங்கை அரசினாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குரல்தரவல்லவர்களாலும் அடையாளப்படுத்தப்படுபவரும் பல்வகைத் தகமைகள் கொண்டவருமான வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னரான நீண்டகாலத்தின் பின்னரான முதற்தடவைக் கனேடிய விஜயம் முக்கியத்துவம்பெறுகின்றது.

வழமையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வரவேற்புக்கள் கனேடிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளையினால் மேற்கொள்ளப்படுவது ஆனால் இம்முறை தமிழ்த்தேசிய அவைகளிகளினால் கொள்கைளில் உடன்படக்கூடிய வெள்வேறு திசைகளில் பயணிக்கும் அனைத்துக்குழுமங்களும் ஒன்றிணையவேண்டும் என திரட்டப்படுகின்றது. மார்க்கம் முல்லைத்தீவு இரட்டை நகர் உடன்படிக்கையும் கைச்சாத்தும் இந்தப்பயணத்தின் கால்கோளாக உள்ளது.

மிக முக்கியமான புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தீர்மானக்கூட்டத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூட்டும்பொழுது தீர்மானம் மிக்க இந்தக் கூட்டத்திலும் வடக்கு முதலமைச்சர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உருவாக்கத்தில், வெளியீட்டில், ஆணைபெறலில் வெளியே நின்றதுபோன்று அல்லது நிற்கவைத்தது போன்ற ஒரு சூழ்நிலை மீளவும் உருவாகியிருப்பது மிகவும் துரதிஸ்டமே. கால அவகாசங்கள் மிகச் சிறப்பாக இருந்தும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதில் மிகவும் விற்பன்னர்களாக திகழ்கின்றனர். மெல்லத் திரும்பும் தீவிற்கு வெளியேயான அரசியல்த் தீர்மான சக்தி விக்னேஸ்வரனை ஆதரிக்கும் பட்சத்தில் மிகவும் இக்கட்டான சூழலில் இன்றைய தமிழ்த்தேசிய பின்புலம் இருக்கும் என்பது நிதர்சனம்.

கனேடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சுதந்திரன் பத்திரிகையை ஈழத்தில் உலாவவிடல் என்பதில் தொடங்கி உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர் தெரிவுவரை பரபரப்பாகவும் சத்தமின்றியும் இயங்கிவருகின்றது உள்நாட்டு தமிழ்அரசியல்.

முதல்வரது நிகழ்ச்சி நிரலில் சனவரி 8 முதல்வருடன் ஒரு மாலைப்பொழுது என்பதில் நிதிச்சேர்க்கை என்பது மிகவும் ஆழமாகப் பார்க்கவேண்டிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. இது ஒரு சாதாரண விஜயமன்று நன்கு திட்டமிடப்பட்ட எதிர்காலத் திட்டமிடலுடன் கூடிய பலமான நிகழ்வே என்பது துணியவேண்டிய விடயமாகின்றது. அவ்வாறானதொரு சூழல் உருவாகுமிடத்து ஈழத்தமிழ்மக்களது பிரச்சினை புலம்பெயர் தமிழர்களது அனுசரணையுடன் யதார்த்தமான கோணத்தில் உள்நாட்டு அரசியல் சமச்சீராக பயணிக்குமிடத்து அது எழுக தமிழாகத்தான் இருக்கும்.

-ஆருத்ரன்-

[email protected]

-http://www.puthinamnews.com

TAGS: