சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்! செயலணி விளக்கம்!

srilanka-killing-fields-newஅறிக்கையைகொண்டு அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம் என்கிறது நல்லிணக்க செயலணி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் பொறிமுறை நம்பகரமாகவும் இயலுமை கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென நாம் பரிந்துரை செய்தோம்.

விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வடக்கு, கிழக்கு மக்கள் மட்டுமன்றி தென்னிலங்கை மக்களும் முன்வைத்தனர் என்று நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி தெரிவித்தது.

எமது பரிந்துரை அறிக்கையானது பொதுவான அறிக்கையென்பதால் அதனை வைத்து அரசாங்கத்திற்கு அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் பிரயோகிக்கலாம்.

காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், இராணுவத்தை அகற்றுதல், போன்ற பரிந்துரைகளையும் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே நாம் முன்வைத்தோம் எனவும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி சுட்டிக்காட்டியது.

இதேவேளை எமக்கு வழக்கப்பட்ட பொறுப்பை மிகவும் சுயாதீனமான முறையில் பாதிக்கப்ட்ட மக்களின் பக்கமிருந்து நாங்கள் செய்திருக்கின்றோம்.

அரசாங்கம் இதனை ஏற்குமா இல்லை என்பது குறித்து நாங்கள் உத்தரவாதம் கூற முடியாது.

ஆனால் இந்த அறிக்கையை வைத்து அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கலாம்.

கடந்த காலத்தில் இந்த நாட்டிலிருந்த சர்வாதிகாரத்தை சிவில் சமூகத்தினரே தூக்கி எறிந்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்வது நல்லது என்றும் செயலணியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கத்திடம் சமர்ப்பித்த நிலையில் அது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்றைய தினம் அரசாங்கத் தவகல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியது.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செயலணியின் பிரதிநிதிகளே இந்த விடயங்களை தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுகம, செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, மற்றும் உறுப்பினர்களான காமினி வியங்கொட, பேராசிரியார் சித்திரலேகா மௌனகுரு, கலாநிதி பர்ஷானா ஹனிபா, பேராசிரியர் கமீலா சமரசிங்க, மிராக் ரஹீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுகம குறிப்பிடுகையில்:-

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் செயற்பாடு தொடர்பாக மக்களின் கருத்தறியும் கடமையை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் நாம் முன்னெடுத்தோம். நாம் 92 உறுப்பினர்கள் இதில் செயற்பட்டோம்.

வலயரீதியில் 15 செயலணிகளை நியமித்து மக்களிடையே கருத்துக்களைப் பெற்றோம். அகில இலங்கை ரீதியில் சுயாதீனமாக செயற்பட்டோம்.

அந்தவகையில் மக்களின் பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம். நாங்கள் மீண்டும் எமது சிவில் சமூக வேலைத்திட்டத்திற்கு சென்று விடுவோம்.

நாம் முன்வைத்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும். நாம் இந்த அறிக்கையை முன்வைப்பதற்கு முன்பாக பாதுகாப்பு செயலாளரை சந்தித்து எமக்கு கருத்துக்களை முன்வைத்த பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தோம்.

எமக்கு ஆலோசனை வழங்கியவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த மக்கள் அரச படையினராலோ அல்லது முன்னாள் போராளிகளாலோ எவ்வகையிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.

பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு குறிப்பிடுகையில்:

கடந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை நாங்கள் இந்த பணியை முன்னெடுத்தோம்.

நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 15 வலய செயலணிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 8 செயலணிகள் செயற்பட்டன.

7306 சமர்ப்பணங்கள் எமக்கு கிடைத்தன. அத்துடன் சமூகத்தின் பல்வேறு பட்ட பிரிவினரிடமிருந்தும் நாங்கள் ஆலோசனைகளைப் பெற்றோம்.

படைகளின் உயர் அதிகாரிகள், மத்தியதர அதிகாரிகள், தனிநபர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனைப் பெற்றோம்.

காணாமல் போனோர் தொடர்பாகவே அதிகமான முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தன. குறிப்பாக நம்பகத்தன்மை பொறுப்புக்கூறல், நீதிக்கான தேடல் போன்றவற்றையே மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்கள்.

அதிகமானோர் தமக்கு நஷ்டஈடு தேவையில்லை என்றும் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

தென்பகுதியிலிருந்தும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியிலும் அதிகளவில் எழுத்து மூலமான சமர்ப்பணங்கள் கிடைத்தன.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் எமது செயலணியிடம் வந்த பாதிக்கப்பட்டோர் தாங்கள் டை, கோட் அணிந்த வெள்ளைக்காரர்களையே எதிர்பார்த்து வந்ததாக கூறினர்.

உண்மை நீதி ஆகிய இரண்டுமே தமக்கு தேவை என தொடர்ச்சியாக வலியுறுத்தி நின்றனர். அந்த வகையில் நாங்கள் மக்களின் கருத்துக்களையே பரிந்துரைகளாக வைத்திருக்கின்றோம்.

போரினால் ஏற்பட்டுள்ள வடுக்களை நீக்குவதற்கு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் மக்கள் பொறிமுறை கட்டியெழுப்பப்படுவதற்கு முன்பதாகவே நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதை மக்கள் வலியுறுத்தினர்.

மக்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். அரசியல் ரீதியான மாற்றத்தையும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் மொழி அமுலாக்கலும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அனைத்து விடயங்களும் சமகாலத்தில் நடைபெறவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமன்றி நினைவுகூருதலை ஒரு மிகப்பெரிய கோரிக்கையாக மக்கள் முன்வைத்தனர் என்றார்.

செயலணி உறுப்பினர் காமினி வியங்கொட குறிப்பிடுகையில்:

நீதிவழங்கும் பொறிமுறைக்கு கருத்துக்களைப் பெறும் நோக்கிலேயே அரசாங்கம் எமது செயலணியை நியமித்தது. அந்தவகையில் நாங்கள் மக்களிடம் கருத்துக்களை கோரினோம்.

அத்துடன் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம். அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது எனத் தெரியாது.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய கருத்துக்களே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாட்டில் பாரிய விவாதங்கள் நடத்தப்படவேண்டும்.

சில குழுக்கள் அதனைக் குழப்ப முயற்சிப்பதாக தெரிகின்றது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் இந்த அறிக்கை உதவுமென நம்புகிறோம் என்றார்.

செயலணியின் பொதுச் செயலர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகையில்:

நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதே மக்கள் எம்மிடம் முன்வைத்த பிரதான கோரிக்கையாகும். பொறிமுறையின் பிரதான விடயமாக நம்பகத்தன்மை காணப்படுகின்றது.

அரசியல் தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், இராணுவ மயமாக்கலை நீக்குதல், மற்றும் காணிகளை விடுவித்தல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் மக்கள் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக அரசாங்கம் இந்த நீதி வழங்கும் பொறிமுறையில் நம்பிக்கையுடன் செயற்படவேண்டும். பொலிஸ், மற்றும் நீதித்துறையில் மக்கள் மறுசீரமைப்பை எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்துடன் சட்ட வழக்குரைஞர் திணைக்களமும் உருவாக்கப்படவேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தப் பொறிமுறையை கண்காணிப்பதற்கு சிவில் சமூக மற்றும் நிபுணத்துவ அனுபவம் கொண்ட கண்காணிப்பு அமைப்பொன்று உருவாக்கப்படவேண்டுமெனவும் கோரப்பட்டது.

எமது பரிந்துரையில் மிக முக்கியமாக நாங்கள் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை நாங்கள் முன்வைத்துள்ளோம். ஜெனிவா பிரேரணையிலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டது.

அந்தவகையில் சர்வதேச நீதிபதிகள் தெரிவு தொடர்பான முறைமை பகிரங்கப்படுத்தப்படவேண்டும். அத்துடன் சர்வதேச நீதிபதிகளை தெரிவு செய்யும்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவகத்தின் ஆலோசனையைப் பெறவேண்டும்.

ஏன் சர்வதேச நீதிபதிகளை மக்கள் கோருகின்றனர் என்ற கேள்வி எழலாம். நம்பகத்தன்மை மற்றும் அனுபவம் ஆகிய இரண்டு விடயங்களுக்காகவே சர்வதேச நீதிபதிகளை மக்கள் கோருகின்றனர்.

அதுமட்டுமன்றி பாதிப்படைந்த தரப்பினரும் பொறிமுறையில் இடம்பெற வேண்டும். உருவாக்கப்படவுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் விசாரணை அலகும் உருவாக்கப்படவேண்டும்.

அத்துடன் சிறுபான்மை மக்கள் தொடர்பான ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படவேண்டும் என்றார்.

கேள்வி:- இந்த செயலணியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதில்லையென ஜனாதிபதி கூறிவிட்டார். இது தொடர்பில் ?

பதில்:- எமது கடமையை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். மக்களின் கருத்து எதுவோ அதனை தெரிவித்திருக்கின்றோம். இந்த இடத்திலிருந்து நல்லிணக்கத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கலாம்.

இதற்கு அரசியலமைப்பில் சட்ட ரீதியான மாற்றங்கள் அவசியம். மேலும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை வழங்கப்படுதல் அவசியம்.

அந்தவகையில் மக்களின் எண்ணங்களையே பரிந்துரைகளாக முன்வைத்திருக்கின்றோம். பொருளாதார ரீதியான பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றோம்.

கேள்வி:- 1987ம் ஆண்டு முதல் 90ம் ஆண்டுவரை இலங்கையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பாகவும் புளொட் அமைப்பினர் 1988ம் ஆண்டு மாலைதீவை கைப்பற்ற முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் உங்களிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதா?

பதில்:- நாங்கள் எமது விடயங்களை முன்னெடுத்த போது அனைத்து விடயங்களையும் வகைப்படுத்தினோம். இராணுவம், புலிகள் தமிழ் ஆயுதக்குழுக்கள், தனிநபர்கள், இந்திய இராணுவம், ஜே.வி.பி.யினர் என அனைத்து மட்டத்திலும் வகைப்படுத்தலை மேற்கொண்டோம்.

யார் தவறு செய்திருந்தாலும் அது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். தற்போது பதவியிலிருக்கின்ற அரசாங்கத்தினால் மட்டுமே நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் மக்கள் எம்மிடம் கூறினர்.

கேள்வி:- அரசாங்கம் உங்கள் பரிந்துரையை நிராகரித்திருக்கிறதே?

பதில்: அரசாங்கம் என்ன செய்யும் என நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. அரசாங்கம் மக்களின் கருத்தை கேட்டது. . நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். இது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். எமது செயற்பாடுகளை நாங்கள் தொடருவோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறை நம்பகரமாகவும் இயலுமைக்கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்காவே மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சர்வதேச நீதிபதிகளை நாம் பரிந்துரை செய்தோம்.

எமது பரிந்துரை அறிக்கையானது பொதுவான அறிக்கையென்பதால் அதனை வைத்து அரசாங்கத்திற்கு அனைத்துத்தரப்பினரும் அழுத்தம் பிரயோகிக்கலாம்.

மேலும் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் மட்டும் கோரவில்லை. மாறாக தென்னிலங்கை மக்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச மட்ட தடயவியலாளர்களே கடமையாற்ற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் சிவில் சமூகம் தனது கடமையை செய்திருக்கிறது.

கடந்தகால சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கும் சிவில் சமூகம் பாரிய பங்களிப்பை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம். நம்பகத்தன்மை மற்றும் அனுபவ இயலுமை ஆகிய இரண்டு விடயங்களுக்காகவே மக்கள் சர்வதேச நீதிபதிகளை கோருகின்றனர்.

மேலும் நாங்கள் சுயாதீனமாக இதனை செய்தோம். அறிக்கை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கத்துடன் நாம் கலந்துரையாடவில்லை.

கேள்வி:- வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றவேண்டும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களும் கருத்து தெரிவித்தனரா?

பதில்:- இராணுவத்தை அகற்றுவது தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களும் உள்ளனர். மேலும் தெற்கிலும் இந்த பிரதிபலிப்பு காணப்பட்டது.

வடக்கு, கிழக்கில் குறிப்பாக இராணுவம் காணிகளை விடுவிக்க வேண்டுமெனவும் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து இராணுவம் விலக வேண்டுமெனவும், அதிக இராணுவப் பிரசன்னம் இருக்கக்கூடாது என்றும் மக்கள் கூறிகின்றனர்.

கேள்வி:- இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் ?

பதில்:- நாம் இதுதொடர்பில் இராணுவத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தாங்கள் இராணுவ வகிபாகத்தை மேற்கொண்டதாக இராணுவ அதிகாரிகள் கூறினர். நல்லிணக்கம் என்று வரும்போது அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறினர்.

-http://www.tamilwin.com

TAGS: