கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள்.
அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்களை எதிர்பார்த்தே தமது வாக்குகளை வழங்கினார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு நல்லினக்க அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க வாரம் இன்று கொழும்பு விவேகாநந்தா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இரண்டு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தற்பொழுது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாங்களும் அதனையே எதிர்பார்க்கின்றோம்.
சர்வதேசத்தின் மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
சமாதானத்தை ஏற்படுத்த இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக நாம் கூற முடியாது. பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆடசியாளர்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு வித்தியாசத்தை நாங்கள் அவதானிக்கின்றோம்.
இந்த பிரச்சினைகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தீர்க்க எத்தனிக்கின்றார்கள்.
பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும் கூட அதற்கான எமது ஒத்துழைப்பை நாம் வழங்காமல் இருக்க முடியாது. ஏனென்றால் நாங்களும் இதில் ஒரு பங்காளிகள்.
எமக்கு இதில் முக்கிய ஒரு பங்கு இருக்கின்றது. அந்த பங்களிப்பை செய்ய நாம் பின்நிற்க கூடாது. காணாமல் போனோர் தொடர்பாக விரைவில் ஒரு முடிவு வர வேண்டும்.
நீண்ட நாட்களாக இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஒரு அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எங்கள் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.
அந்த மக்களுடைய வாழ்ககையில் ஒரு நிம்மதி ஏற்பட வேண்டும். ஒரு சமாதானம் ஏற்பட வேண்டும். அவர்களுடைய மனதில் ஒரு சாந்தி ஏற்பட வேண்டும். அவர்கள் நடந்த உண்மையை அறிய வேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் காலத்தை வீணடிக்காது செயற்பட வேண்டும் என நான் கருதுகின்றேன். எமது மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விடயங்களில் தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுகின்றது. ஆனால் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com