ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது பிழை இல்லை என்றால் புலிகளுடன் அன்று ரணிலின் அரசு செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பிழை இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வதற்கு இந்த அரசு தீர்மானித்துள்ளது. இந்த வருடம் முடிவதற்குள் அதிகமான சொத்துக்கள் விற்கப்பட்டுவிடும்.
சீனா உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் சொத்துக்கள் விற்கப்படவுள்ளன. நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காகவே இவ்வாறு செய்வதாக அரசு கூறுகின்றது.
அவ்வாறு கடன் சுமை இருப்பதாகத் தெரியவில்லையே. கடன் சுமை உள்ள நாடு எதற்கு அமைச்சர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்க வேண்டும்..?
அமைச்சர்களுக்கு வாகனங்களையும் மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்கிக்கொண்டு இந்த நாட்டு மக்கள் மீது கடன் சுமைகளை ஏற்றுவது எந்த வகையில் நியாயம்? இந்தத் தேவையற்ற சலுகைகளையும் திருட்டுக்களையும் நிறுத்தினால் போதும்.
நிறைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை. கூட்டு முயற்சியின் ஊடாக அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்று இந்த அரசு கூறுகின்றது.
அப்படி என்றால் ஏன் இதைத் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? மக்களிடமோ மக்களின் பிரதிநிதிகளான எங்களிடமோ இதுபற்றி அறிவிக்காமல் எம்மைத் தெளிவுப்படுத்தாமல் செய்வது ஏன்?
இவ்வாறு அரச சொத்துக்கள் விற்கப்படுவது சரி என்றால் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் அப்போது செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் சரிதான்.
ஆகவே, இந்த அரசு செய்த,செய்யும் இதுபோன்ற தேசவிரோத செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துகின்றது. இந்த மோசமான நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது. இதற்கு இன்றே முடிவு கட்ட வேண்டும்.
மேலும், நாம் இதற்கு எதிராக இந்த வருடம் முழுவதும் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைளுடன் மக்கள் இணையவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com