மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். இயற்கைக்கும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் நன்றி கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இத்திருநாளை நாம் கொண்டாடுகிறோம்.
ஒரு நாட்டின் அடிப்படை உணவு தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்கின்றனர். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால், நாட்டின் பொருளாதாரத் திட்டங்கள் இயற்கை வளங்களையும் விவசாயிகளின் முயற்சிகளையும் பாழாக்கிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களைப் பாதுகாக்காமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் அளிக்காமல் நாம் கொண்டாடும் பொங்கலுக்கு அர்த்தமில்லை.
உலகமய சூழ்நிலையில் பெரும் முதலாளிகள் ‘மேம்பாடு’ எனும் போர்வையில் விவசாய நிலங்களைச் சூரையாடுவதும் இயற்கை வளங்களை அழிப்பதும் தொடர்கதையாகவே உள்ளது. இது ஒரு பெரும் பிரச்சனை. கௌரவமாக மண்ணை நம்பி பிழைத்து வந்தவர்களை தங்களின் சுயஇலாபத்திற்காக பழிகொடுக்கும் முதலாளித்துவத் திட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.
1970 களில், நம் நாட்டில் விவசாய நிலங்கள் பெரும் அளவில் இருந்தன. ஆனால், இப்பொழுது அவை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகின்றன. பெரும் அளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால், விவசாயத்திற்கு நிலப் பற்றாக்குறை ஏற்பட்டு சிறிய அளவில் விவசாயம் செய்பவர்களால் போதுமான வருமானத்தை ஈட்ட முடிவதில்லை. இதனால், சிறு விவசாயிகள் கால ஓட்டத்தில் விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குள்ளாகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நம் நாட்டின் விவசாயத் துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.
இதே நிலைதான் நெல் வயல்களுக்கும். வயல் வளங்கள் அழிக்கப்படுவதால் மலேசியர்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி போன்றவை பெரும் அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தனியார் தேசிய அரிசி நிறுவனமான ‘பெராஸ் நேஷனல்’ அல்லது ‘பெர்னாஸ்’ (Bernas) ஏகபோக உரிமையுடன் அரிசியைப் பெருமளவில் பிற நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து, கூடுதல் விலையை நிர்ணயித்து, மக்களுக்கு விற்கிறது. இவர்களுக்கு உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து அரிசியை வாங்கும் நோக்கம் இல்லை. ஆதாய நோக்கம் கொண்டிருக்கும் இதுபோன்ற நிறுவனங்களால் விவசாயமும் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதையக் காலகட்டத்தில், இளைய சமூகம் விவசாயத் துறையில் ஆர்வம் காட்டுவதில்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களே ஓரளவு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை நீடித்தால், நாம் விவசாயத்தை இழந்துவிடுவோம். நமது உணவு தேவைக்கு 100 விழுக்காடு இறக்குமதி அரிசியை நம்பியிருக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். நமக்கான உணவுப் பாதுகாப்பை அந்நிய நாடுகளிடம் ஒப்படைத்தால் அனைத்து நிலைகளிலும் நாம் பெரும் சீரழிவை எதிர்நோக்கக்கூடும்.
இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, அரசாங்கம் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இளைஞர்களை இத்துறைக்குக் கவரும் வகையான திட்டங்களையோ பயிற்சிகளையோ அரசாங்கம் கண்டறியவில்லை. விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கும் திட்டமும் மிக மிகக் குறைவு.
தற்போதைய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி, இறக்குமதி பொருள்களுக்கான விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும். குறைந்த வருமானம் பெறும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். அரசாங்கம் தற்போது கொண்டு வந்துள்ள விவசாயத்திற்கானப் புதிய சட்டத் திட்டங்கள், விவசாயிகளுக்கு மேலும் மோசமான விளைவுகளையே கொண்டு வருகின்றன. விவசாயத்திற்கான விதைகள், உரங்கள், பூச்சிக் கொள்ளி மருந்துகள் மற்றும் களைக் கொள்ளிகள் போன்றவற்றின் விற்பனைக்கான உரிமையைப் பன்நாட்டு நிறுவனமான ‘மொன்சாந்தோ’ (Monsanto) பெற்றுள்ளது. இது விவசாயிகளை அந்நியர்களின் ஆதிக்கத்துக்கு அடிமைபடுத்தும் ஒரு செயலாகும். ‘நாட்டு விவசாயம்’ என்று கூறப்படும் இயற்கை விவசாயம் இன்று அடியோடு அழிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டியது அனைவரின் கடமையாகும். பொங்கல் வெறும் கொண்டாட்ட நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் விவசாய வளர்ச்சிக்கும் இயற்கை பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கும் விழாவாக அமைய வேண்டும்.
இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறும் வகையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
சிவராஜன், பொதுச் செயலாளர், மலேசிய சோசியலிஸ்ட் கட்சி.
தமிழ் நாட்டு விவசாயிகள் உயிர் இழப்பது வருத்தப்பட வேண்டியது என்றாலும் அது மிகவும் மடத்தனம்– அதனால் ஆக்கப்பபோவது ஒன்றுமில்லை. இறக்கும் முன் விவசாய எதிரிகளை யாவது முடித்திருந்தால் அதை நான் பாராட்டுவேன் — காரணம் அங்குள்ள ஈனங்களுக்கு- தமிழ் திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல் அடித்தால் தான் ஒழுங்குக்கு கட்டுப்படுவான் கள்- அதிகாரத்தில் ஒருவன் கொல்லப்பட்டிருந்தால் அது ஒரு பாடமாக இருந்திருக்கும்– வீணாக தற்கொலை செய்து இறப்பவர்களுக்கு அனுதாபம் தேவை இல்லை.போகும் முன் நல்லது செய்தால் பரவாயில்லை.–வெறுமனே தற்கொலை வீண். யாருக்கும் பலன் இல்லை.
ippadiyeththaan kadantha 20 aandugalaaga sollik kondirukkireergal. ethaiyaavathu seithu kaattungalenpaa!