அமெரிக்கா மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்கும்.. போருக்கு ரெடி? சீனாவின் பகிரங்க எச்சரிக்கை

amechinaதென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு செல்வதை தடுத்தால் போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவுக்கு சீன ஊடகம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கை தீவுகளை அமைத்துள்ளது.

தென் சீனக்கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும், உலகின் மூன்றில் ஒரு பங்கு கடல் போக்குவரத்து இந்த பகுதி வழியே நடைபெறுவதாலும் இது பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் தென் சீனக்கடலில் சீனா உரிமை கொண்டாடி வருகிற வேளையில், தென்சீனக் கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இது தொடர்பாக ஐநா சபையின் சட்டதிட்டங்களின்படி செயல்படுகிற சர்வதேச தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்ட ரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அதிரடி தீர்ப்பு வந்தது.

இந்த தென்சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்காவும் தலையிட்டுள்ளது. அந்த நாட்டின் புதிய வெளியுறவு மந்திரியாக பதவி ஏற்க உள்ள ரெக்ஸ் டில்லர்சன், தென்சீனக்கடல் விவகாரத்தில் இரண்டு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், தென் சீனக்கடலின் புதிய தீவுகளுக்கு சீனா செல்வதை அமெரிக்கா தடுக்க வேண்டும். சீனாவுக்கு தெளிவான ஒரு சமிக்ஞையை தெரிவிக்க விரும்புகிறோம். முதலில் அந்த தீவுகளில் கட்டிடங்கள் கட்டுவதை சீனா நிறுத்த வேண்டும். அடுத்து அந்த தீவுகளுக்கு சீனா செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து, சீனாவுக்கு பெரிதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சீன அரசு ஊடகம், சீனா தான் கட்டியுள்ள தீவுகளுக்கு செல்வதை தடுத்தால், அது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோதல்களுக்கு வழிவகுத்து விடும் என அமெரிக்காவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை, அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ‘அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை, மிகப்பெரிய அளவிலான போருக்கு வழிநடத்தி விடும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சீனாவின் அதிகாரப்பூர்வ பதிலும் வெளிவந்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லு காங் கூறும்போது, சீனா தனக்கு சொந்தமான பிரதேசத்தில் வழக்கமான செயல்பாடுகளை செய்வதற்கு உரிமை இருக்கிறது.

தென்சீனக்கடல் தீவுகளுக்கு செல்வதை தடுத்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறமுடியாது.

-http://news.lankasri.com