உலகின் பெரும் வல்லரசு நாடுகளாக இருக்க கூடிய அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இன்று பல்வேறு துறையிலும் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றன.
பொருளாதாரம், இராணுவ பலம், ஆயுத உற்பத்தி என பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் தங்களை போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
உலக நாடுகளை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ளும் நோக்கிலும், கட்டுப்படுத்தும் நோக்கிலும் இன்று வல்லரசு நாடுகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மறுபுறம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்கா இரகசியமான முறையில் தயாரிக்கும் ஆயுதம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் இரகசியமான முறையில் தயாரிக்கபடும் இந்த ஆயுதத்தை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இந்த ஆயுதத்தைக்கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த இடம் முழுவதுமாகவே , ஸ்தம்பித்து போய்விடும் என கூறப்படுகின்றது.
எலக்ரோ மக்னடிக் பல்ஸ் என அழைக்கப்படும் மின் காந்த புலம், ஒரு இடத்தில் உருவாகினால், அந்த இடத்தில் அமைந்துள்ள ரேடியோ தொடர்பாடல், மின்சாரம், இணையம், கணினி முதல்கொண்டு அனைத்தும் செயல் இழந்துவிடும்.
அவ்வாறான மின் காந்த புலத்தை ஒரு நேர்த்தியாக வடிவமைத்து, எறிகணை ஒன்றில் பொருத்த செய்து அதனை வெடிக்க வைப்பதற்கு அமெரிக்கா இரகசியமான முறையில் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிரிகளை இலக்கு வைத்து இந்த ஆயுதத்தைக்கொண்டு தாக்குதல் நடத்தினால், அந்த இடத்தினையே முழுமையாக ஸ்தம்பிதமடைய செய்ய முடியும் என கூறப்படுகின்றது.
இதன் மூலம் எதிரிகள் மீது மிகவும் இலகுவாக தாக்குதல் மேற்கொள்ள முடியும். அத்துடன், வானில் பறக்கும் விமானம், ஹெலிகொப்டர் முதல்கொண்டு அனைத்தையும் இந்த மின்காந்த புலம் பாதிப்படைய செய்யும் என கூறப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்கா இவ்வாறான ஆயுதங்களை தயாரித்து வருவதாக சீனா ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தது. மேலும், அமெரிக்காவின் இந்த திட்டத்தினால் உலக நாடுகள் பலவும் அச்சத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனெனில், பிற்காலத்தில் தீவிரவாதிகளும் இவ்வாறான ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்த கூடும் என உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com