வடமாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், குடிநீருக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்நதும் கருத்து தெரிவித்து அவர்,
பாதிப்புக்கள் தொடர்பாக முழுமையான தகவல்களையும் நாம் சேகரித்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
குறிப்பாக தான் நாட்டில் இல்லாத போதும் அந்த பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. எனினும் சரியான தீர்மானம் ஒன்று இது வரையிலும் எடுக்கப்படவில்லை. ஆனால் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டியது கட்டாயம். இதேபோல் விவசாயிகள் காப்புறுதியை செய்யவேண்டும் என நான் பல தடவைகள் பேசியிருக்கிறேன்.
ஆனால் விவசாயிகள் அவை தொடர்பாக கருத்தில் கொள்ளவில்லை. நல்ல விளைச்சல் வரும்போது எங்களுடைய கருத்தை குறித்து சிந்திக்காத விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும்போது எங்கள் கருத்துக்களை பற்றி சிந்திக்கிறார்கள்.
இது மோசமான நிலையாகும். இதேபோல் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமார் நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக வரட்சியினால் குடிநீரை பெற முடியாத நிலையில் இருக்கின்றது.
மக்கள் பலத்த கஷ்டத்தை சந்தித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com