முல்லைத்தீவு மாவட்டத்திலே போருக்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்காததன் காரணமாக மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்க்கையை நடாத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கு வீடு கிடைக்காததன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போரினால் தமது சொத்துகள் அனைத்தும் இழந்து நலன்புரி
முகாம்களில் ஓராண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை நடாத்தி தமது சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள உதவிகள் தமது வாழ்க்கை நடாத்துவதற்கு
போதுமானதாக இல்லை என கூறியுள்ளனர்.
அத்துடன், தற்காலிக வீடுகளில் 07 ஆண்டுகள் வாழ்க்கை நடாத்துவதாகவும் கடந்த ஆட்சிக் காலத்திலும் வீடுகள் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய ஆட்சிக் காலத்திலும் வீடுகள் கிடைக்கவில்லை. நாம் அரசிடம் கேட்பது போர்காலத்தில் அழிக்கப்பட்ட எமது வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைத்துத் தாருங்கள் என்பதையே அதனை விரைந்து செய்வதன் மூலமாகவே எமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளனர்.
மேலும்,கிராமங்களில் போக்குவரத்து, மருத்துவ வசதிகள் குறைந்து காணப்படுவதன் காரணமாக நிரந்தர வீடுகளையாவது விரைவாக அமைத்துத் தாருங்கள் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

























