எழுக தமிழ் பேரணி என்றதும் தீர்வு வருகிறது என்றுரைப்பதோ!

eluka-tamil-240916பனங்கட்டி என்ற ஒரு சிறந்த மருத்துவப் பண்டம் கற்பகதருவின் கொடையில் என்று முன்பெல்லாம் தேனீர் அருந்துவதற்கு பனங்கட்டியையே அனுமானமாக கொள்வர்.

ஆடிப்பிறப்பில் ஆடிக்கூழ்; ஆடி அமாவாசையில் களி இவற்றிற்காக நம் தமிழ் மண்ணில் பனங்கட்டி வியாபாரம் களைகட்டும். அந்தளவிற்கு பனங்கட்டிக்கு மவுசு அதிகம்.

இப்போது பனங்கட்டி வாங்குவார் இல்லை என்பதோடு விலையும் அதிகமாயிற்று. இவை ஒருபுறம் இருக்க, கருப்பணியை நன்றாக காய்ச்சி பனங்கட்டி தயாரிப்பது வழக்கம்.

நம் கிராமத்து குடிசைக் கைத்தொழிலாக பனங்கட்டி உற்பத்தி நடைபெற்றது. கருப்பணியை காய்ச்சும் போது அது நன்றாக கொதித்தெழும்.

அவ்வாறு கொதித்தெழுவதை தணிப்பதற்காக கருப்பணி காய்ச்சப்படும் சட்டிக்குள் ஏதாவது போடவேண்டும்.

நம் முன்னோர்களின் வாய்மொழிக் கதைப்படி கொதிப்பை அடக்க மண்ணைக்கூட போட்டதாக அறிய முடிகிறது.இதில் எந்தளவு உண்மை உண்டோ நாம் அறியோம்!

ஆனால், பனங்கட்டியில் மண் கரகரக்கும் போதெல்லாம் கருப்பணியின் கொதிப்பை அடக்க மண்ணைப் போட்டுள்ளார்கள் என்று சொல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இதன் உண்மை பொய் பற்றிய ஆய்வுகள் இப்போது தேவையற்றவை.இருந்தும் மனக்கொதிப்பை அடக்க சிலர் மண்ணைப் போடுவது வழக்கம் என்பது மட்டும் உண்மை.

இதற்கு நல்ல உதாரணம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியாகும். எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு வருகின்றது!

தமிழர்கள் தங்களைத் தாமே ஆள்வதற்கு புதிய அரசியலமைப்பு வழி செய்கிறது என்று சொல்வார்கள்.

இன்னும் ஒருபடி மேலே சென்று தமிழ் மக்கள் பேரணிகள் நடத்தினால் அது கிடைக்கின்ற தீர்வைத் தடுத்து விடும் என்று சொல்கிறார்கள்.

உண்மையில் இனப்பிரச்சினைக்கு தீர்வேதும் வருவதாக இருந்தால், அதற்குக் காரணம் தமிழ் மக்கள் நடத்திய போராட்டம் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

நிலைமை இதுவாக இருந்தும் தமிழ் மக்கள் தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஜனநாயக வழியில் அகிம்சை முறையில் வெளிப்படுத்துவது கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சம் அடைகிறது.

தங்களின் முயற்சியும் தங்களிடம் இருக்கக்கூடிய இராஜதந்திரமுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக் காரணம் என்று நினைப்பவர்களும் நம் மத்தியில் இருக்கின்றனர்.

இந்த நினைப்புக்கள் அடிப்படை நியாயமற்றவையாயினும் அரசாங்கத்தை காப்பாற்றுவதை உள் நோக்கமாகக் கொண்டு எல்லாமும் நடந்தாகிறது.

எது எப்படியாயினும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை அடக்கும் நோக்கில் தீர்வு வருகிறது என்று கூறி தமிழ் மக்களின் உணர்வுகளை அடக்க நினைப்பது எம் இனத்திற்கு செய்யும் மிகப்பெரும் கொடுமைத்தனம் ஆகும்.

உண்மையாகவே தமிழ் மக்களிற்கான தீர்வு வருமாக இருந்தால் அது வரவேற்கப்படவேண்டும்.

ஆனால் தீர்வு என்பது ஏமாற்று நாடகமாக இருக்கும் போது, எழுக தமிழை அடக்குவதற்காக மண்ணைக் கொட்டுவது அநியாயமானதல்லவா?

– Valampuri

TAGS: