ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய உத்தரவிட்ட பிள்ளையான்..! அம்பலமாகும் உண்மைகள்

pillaiகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவனேசதுறை சந்திரகாந்தன் பிணை கோரி உயர்நீதி மன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளது. பிள்ளையானின் உத்தரவின் பேரில் சாந்தன் என்பவர் இந்த படுகொலையை செய்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பிள்ளையான் மீது மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பிள்ளையான் தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பிணை மனு மீதாக விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: