அவர்கள் உயிரோடுள்ளார்களா?

missingகைது செய்யப்பட்டு, சரணடைந்த இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிருடன் உள்ளார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா என்ற விபரம் தெரியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான உற்றார்கள், உறவினர்கள் தற்போது எம்மண்னில் போராட்ட களத்தில் குதித்துள்ளர்கள்.

நீதியான அவர்களது கோரிக்கைகளை உலகில் எங்கும் பரந்திருக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது, மானுடத்தை நேசிக்கும் அனைவரும் ஆதரிப்பது கடமையாகும்.

ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரத்தை முன்பிருந்த ராஜபக்ஸ அரசும் இப்போதுள்ள சிறிசேன அரசும் மறைக்க முற்படுவதை அம்பலப்படுவதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை “அவர்கள் உயிருடன் உள்ளர்களா “Are They Alive?” – என்ற தொடர் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தொடர்கின்றது.

பிரித்தானிய ஆட்சிபீடம், ஐநாவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் உட்பட பன்னாட்டு மன்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள் பெயர், விடுவிக்கப்பட்டவர்கள் பெயர் மற்றும் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான விவர தொகுப்பினை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம்.

இக் கோரிக்கையின் நியாயத் தன்மையை உணர்ந்து உலகின் பல்வேறு முக்கியமான அமைப்புகளும் பல்வேறு நாடுகளும் சிறிலங்கா அரசிற்கு கொடுத்த அழுத்தம் காரணமாக காணாமல் போனவர்களுக்கான காரியாலயம் (OMP) ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் இது ஒரு காலம் கடத்தும் தந்திரம் என்றும் இதனால் எந்தவித பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் தொடர்ந்து பல நாடுகளுக்கு தெரியப்படுத்தி வருகின்றோம்.

இந்த நிலையில் வவுனியாவில் இடம் பெறுகின்ற சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவினைத் தெரிவித்து,

வருகின்ற ஞாயிற்று கிழமை இலக்கம் 10 டவுனிங் தெருவில் பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

வருகின்ற மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் கூட்டத் தொடர் சிறிலங்கா அரசிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

பண பலம், சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைத்து வளங்களோடும் வசதிகளோடும் எம் மக்களுக்கு நடந்த கொடுமைகளை மறைத்து உலகின் நேரடிப் பார்வையிலிருந்து நழுவிச் செல்ல சிறிலங்கா அரசு திட்டம் தீட்டி துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

அசுர பலமிக்க “கோலியாத்து” போன்ற சிறிலங்கா அரசின் முன்னே எளிமையான “தாவீது” போல தமிழர் தரப்பும் தார்மீக பலத்தினையே தற்காப்புக் கவசமாகக் கொண்டு தனது தயாரிப்பு நடவடிக்கைகளை நுட்பமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த வேளையில் எம் உறவுகள் தாயகத்தில் துணிவுடன் மேற்கொண்டுள்ள சாத்வீகப் போராட்டம் உலகின் கவனத்தினை ஈர்க்க வேண்டும். அதனை உங்களால் செய்ய முடியும்.

ஒவ்வொரு உயிரும் பெறுமதி மிக்கது! காணாமல் போன அனைவருக்கும் என்ன நடந்தது என்பதனை வெளிக் கொண்டு வருவோம் என்று உறுதியுடன் போராடுவோம்.

இவ்வாறு பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: