தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாது போனால் தவிர்க்க முடியாத சுழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் எச்.எம்.மொஹமட் விரும்பியிருந்தார்.
அத்துடன், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தீவிரமாக நம்பியிருந்தார். எனினும், அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த அரச தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதன் காரணமாக, அவருடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாது போனது, இவ்வாறான நிலையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கடினமானது என பின் ஒரு நாளில் எச்.எம்.மொஹமட் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலைமை இன்னமும் தொடர்கிறது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும், அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. இது எதிர்பார்க்காத நிலைமைகளை நாட்டில் ஏற்படுத்தும் என இரா.சம்பந்தன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com