நாட்டில் மூன்று தசாப்த காலம் நிலவி வந்த பயங்கரவாத சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இற்றைக்கு 07 வருடங்கள் கடந்து விட்டன.
அதன் பயனாக பயங்கரவாத நிலைமை நிலவிய போது, காணப்பட்ட அச்சம், பீதி 2009ம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதி முதல் நாட்டில் எங்குமே இல்லை.
இன்று சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் தழைத்தோங்கியுள்ளன.யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு இன்று முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் மூன்று தசாப்த காலம் பயங்கரவாத சூழல் நிலவிய யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏனைய பிரதேசங்களை விடவும் மிகுந்த விழிப்புடனும், முன்னவதானத்துடனும்தான் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறிருந்தும் கூட கடந்த திங்களன்று இரவு சுமார் ஏழரை மணியளவில் யாழ்ப்பாணம் அரசடிச் சந்தியில் இடம்பெற்ற சம்பவம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் சுமார் 07, 08 இளைஞர்கள் தம் முகங்களை துண்டுகளால் மறைத்து கட்டிய நிலையில் வாள்களுடன் மோட்டார் பைசிக்கிளில் வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அங்கு மோட்டார் பைசிக்கிளில் அமர்ந்தபடி நின்று கொண்டிருந்த ஒருவரை எதுவித கேள்வி
அத்தோடு அவ்விடத்தில் காணப்பட்டவர்களையும், அவ்வீதி வழியாக அச்சமயம் அங்குமிங்கும் பயணித்தவர்களையும் கூட வாள்களுடன் துரத்தினர்.
அங்கிருந்த பல சரக்குக் கடை மீது இக்கும்பல் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்நடாத்தியது.
இவ்வாறு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட இக்கும்பல் வந்த மோட்டார் பைசிக்கிள்களிலேயே அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றது.
இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக இருவர் வாள் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
பல சரக்கு கடையும் எரிந்து சேதமடைந்துள்ளது.முற்றிலும் தென்னிந்தியச் சினிமாப் பாணியில் அரங்கேற்றப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தை தேசியத் தொலைக்காட்சிகள் நேற்று முன்தினம் மாலையில் ஒளிபரப்பியுள்ளன.
இச்சம்பவம் யாழ்ப்ப்பாணத்தில் மாத்திரமல்லாமல் வட பகுதியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இதேநேரம், மீண்டும் வடக்கில் யுத்தமும் வன்முறையும் தோற்றம் பெறுவதற்கான முன் சமிக்ஞையா என்ற கேள்வியைத் தென்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆவா குழு என்ற பெயரில் வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஈடுபட்டு வந்தவர்களைச் சட்டத்தின் பிடியின் கீழ் கொண்டு வந்து அவர்களது செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இருந்தும் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் அதே பாணியிலான வன்முறை மீண்டும் இப்போது இடம்பெற்றிருக்கின்றது.
இந்த சம்பவம் பல கோணங்களிலும் கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக சட்டம் ஒழுங்கு முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பிரதேசத்தில் முகங்களைத் துண்டுகளால் மறைத்துக் கட்டியபடி வாள்களுடன் மோட்டார் பைசிக்கிளில் எவ்வாறு- வீதி வழியாக வந்தனர்?
இவர்களது பின்னணி என்ன? என்பன குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
அதேநேரம் இக்கும்பல் முன்பு அனுபவம் பெற்றவர்கள் போன்று அங்கு காணப்பட்டவர்களை சர்வ சாதாரணமாகத் துரத்தி துரத்தி வாள்களால் வெட்டியது. இது ஒரு பயங்கரக் கோரக் காட்சியாகும்.
அதனால் அவர்களது மனநிலை தொடர்பில் கவனம் செலுத்த வேணடிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றது.இவை இவ்வாறிருக்க, இவ்வாறான குரூர வன்முறை என்ன நோக்கத்திற்காக அரங்ககேற்றப்பட்டது.
இதன் பின்புலம் என்ன? வடக்கில் மீண்டும் யுத்தமும் வன்முறையும் ஏற்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டவென திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகரச் செயலா இது?
இல்லா விட்டால் நாட்டில் யுத்தம் முடிந்து விட்டாலும் வடக்கில் அச்சமும் பீதியும் இன்னும் நிலவவே செய்கின்றன. குரூர வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன என்று வெளிநாடுகளுக்கு காண்பிப்பதற்காக இவ்வாறான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றதா:?
இவை தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும்.நாட்டுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான சூழ்ச்சிகர செயற்பாடுகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது தான் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சட்டம் ஒழுங்கை எவரும் கையில் எடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. சட்டத்தைக் கையில் எடுக்க முனைபவர்களைச் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு அவர்களுக்கு புனர்வாழ்வும் அளிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாகவே அச்சம் பீதியற்ற நிலைமை நாட்டில் நீடித்து நிலைக்க வழிவகுக்கும்.
-http://www.tamilwin.com