மலையகம் எழுச்சி பெற மலையக தலைவர்களிடம் ஒற்றுமை வளர வேண்டும் : ஜனாதிபதி

malaiyagamநாட்டில் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஒற்றுமையின்மை காணப்படுவது ஒரு அரசியல் பிரச்சினையாக இருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகளிடத்தில் ஒற்றுமை இல்லை. அதேபோன்று மலையகத்திலும் ஒற்றுமை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று(09) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

கடந்த காலத்தில் தலவாக்கலையில் நிகழ்வு ஒன்றுக்காக உலங்கு வானூர்தியில் பயணித்த வேளையில் காலநிலை சீர்கேட்டினால் நான் பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

அப்போது தான் தெரியும் இது தொண்டமானின் இடம் என்று. எனக்கே தெரியாமல் நான் தொண்டமானின் இடத்தில் இறங்கி விட்டேன்.

இங்கு வருகை தந்த பொழுது இப்பிரதேச மக்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று தேவை என கேட்டனர்.

ஒரு வாரத்தில் தருகிறேன் என ஒப்புக்கொண்டேன். அதன் பிரகாரம் கடந்த வாரம் அம்பியூலன்ஸ் வண்டி வழங்கினேன்.

அதேபோன்று இப்பகுதி பாடசாலைகளில் மலசலகூட குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்தனர்.

அதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

சுமார் 20 தொடக்கம் 25 வருட காலப்பகுதியில் தொண்டமானுடன் கைகோர்த்து சேவை செய்து வருகின்றேன்.

பாராளுமன்றத்தில் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் இருந்த காலப்பகுதியில் மலையக மக்களின் உரிமை தொடர்பாகவே அவர் குரல் எழுப்பி வந்தார்.

அதேபோன்று ஆறுமுகன் தொண்டமானும் மலையக மக்களுக்காக அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என என்னை சந்தித்து பேச்சு நடத்தினார்.

அரசாங்கம் என்ற ரீதியில் இனம், கட்சி, வர்க்கம் என்ற பேதம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சம உரிமையுடன் உரிமைகளை அனுபவிக்கவும் சமத்துவமாக வாழவும் நான் முயற்சி செய்து வருகின்றேன்.

நமது நாட்டில் 30 வீதத்திற்கு அதிகமானோர் பெரும் வறுமையான வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதில் தோட்ட தொழிலாளர்களும் உள்ளடங்குவார்கள். எதிர்வரும் காலத்தில் இந்த வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக இந்த வருடத்தை வறுமை ஒழிப்பு வருடமாக நான் செயல்படுத்தி வருகின்றேன்.

உணவு அபிவிருத்தி விவசாய திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் அடுத்த மாத அளவில் காலநிலை சீராகும் பட்சத்தில் இத்திட்டத்தை துரிதப்படுத்த ஏதுவாக அமையும்.

வறுமை தலைதூக்குவதற்கு காரணம் மதுபானம், சிகரட், கஞ்சா ஆகிய போதை பொருட்களை பாவித்தல் மற்றும் பணத்தை வீண் விரயோகம் செய்தலே ஆகும். இதன் காரணமாக வறுமையை ஒழிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைகளை மலையக மக்களுக்காக செய்யும் அதேவேளை மலையக பிரதேசங்களான பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி ஆகிய பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் போன்றவற்றை அரசாங்கம் என்ற ரீதியில் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.

தொண்டமான் இன்று அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயல்படுகின்றார். வரவு செலவு திட்டத்தில் 64 மேலதிக வாக்குகள் எமது அரசுக்கு கிடைத்தது.

இதில் இ.தொ.காவும் வாக்களித்து வரவு செலவு திட்டத்தை வெற்றியீட்ட செய்தனர்.

அப்பொழுது கூட மலையக மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் என்னிடம் இவர்கள் வலியுறுத்தினர்.

நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுக்க மக்களை நல்ல முறையில் பிரதிநிதித்துவப்படுத்த அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் தலைவர்களிடம்ஒற்றுமை வேண்டும்.

மலையகத்தில் ஒற்றுமை இன்மைக் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் வென்றெடுக்க முடியாமல் இருப்பதை கண்டுள்ளேன்.

அவர்கள் இங்கு ஒற்றுமையை வளர்த்து மக்களுக்கு சேவை செய்வதுடன் அரசியல் ரீதியாகவும், தனி மனித ரீதியாகவும் அனைவரும் ஒற்றுமையுடன் மலையகத்தில் செயற்பட வேண்டும் என மலையக தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: