இலங்கைக்கான காலஅவகாசம் தமிழருக்கு நாசம் செய்யும்

genevaஇலங்கைத் தமிழ் மக்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் துரோகம் செய்தனர். சர்வதேச சமூகம் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. இவ்வாறு சொல்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

வன்னியில் பெரும் யுத்தம் நடந்து தமிழின அழிப்பு இடம்பெற்ற போதிலும் இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் ஏதிலிகளாகவே வாழ்கின்ற நிலைமையில் உள்ளனர்.

உலகில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஐ.நா சபையால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ஆட்சியாளர்கள் யுத்தம் நடத்தியபோது ஐ.நா சபை பார்த்துக் கொள்ளும்; அண்டை நாடான இந்தியா காப்பாற்றும்; அமெரிக்கா விடாது என்று தான் நம்பியிருந்தோம்.

ஆனால் போர்க்களத்தில் தமிழ் மக்களை அநாதைகளாக கைவிட்டு அங்கிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களே முதலில் வெளியேறின. இதிலிருந்து சர்வதேச சமூகத்தின் கபட நாடகத்தை உணர முடியும்.

போர் முற்றுப் பெற்று சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை கொடும் ஆட்சியர் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்த போது,ஐ.நா பொதுச் செயலாளரான பான் கீ மூன் அப்போது உலங்குவானூர்தியில் வந்து போனார்.

இருந்தும் தமிழ் மக்கள் தொடர்பிலோ அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக் குறித்தோ அவர் எதுவும் பேச மறந்தார்.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாயினும் இன்று வரை அந்த விடயம் காலம் கடத்தப்படும் நாடகத்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.

இலங்கை ஆட்சியாளர்கள் தமக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா அமைப்பிடம் தமது கருத்தை திணித்து விடுகின்றனர்.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தொடர்பில் ஐ.நா சபையில் கதைப்பதற்கு யாரும் இல்லை என்ற நிலைமையே காணப்படுகிறது.

இந்தியாவை நம்புங்கள் என்று கூறிய பிரதமர் மோடியும் இன்று வரை ஈழத் தமிழர் உரிமை விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.

மாறாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப் நமது பிரச்சினையில் அறவே தலையிடார் போல் தெரிகிறது.

ஆக, ஈழத் தமிழர் தொடர்பில் சர்வதேசத்தின் நிலைமை இதுவென்றால், உள்நாட்டில் தமிழர்களின் அரசியல் தலைமையும் இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்களின் அவலங்கள் பற்றி சிறிது கூடச் சிந்திக்காதவர்களாக இருக்கின்றனர்.

இதுவே இன்றைய யதார்த்த நிலை. இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவெனில் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படக் கூடிய சூழ்நிலை இருப்பதும் அதற்கு நம்மவர்கள் ஆமாப் போடுவதுமாகும்.

எது எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படுமாயின் அது ஈழத் தமிழர்களுக்கு மிகப் பெரிய கெடுதியைச் செய்யும் என்பதுடன்,இலங்கையில் ஈழத் தமிழர்களின் உடைமைகள், உரிமைகள் தொடர்பில் மிகப்பெரிய இழப்புக்களையும் கொண்டு வரும்.

ஆதலால் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்குதல் என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது இதை வலியுறுத்துவதே தமிழர் தரப்பின் முதற்பணியாக இருக்க வேண்டும்.

-http://www.tamilwin.com

TAGS: