அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டு விசா நடைமுறையை எளிமையாக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். அது அமெரிக்க மக்கள் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஜனாதிபதியின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இந்நிலையில், இன்று டிரம்ப் கூறுகையில், அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.
முன்னதாக, நீதிமன்றத்தின் தடை உத்தரவை வெகு மோசமான முடிவு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான முடிவு என டிரம்ப் விமர்சித்திருந்தார். தற்போது டிரம்ப் இது போன்று கூறியிருப்பது தங்களுக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என்று வாஷிங்டன் மாநில அட்டார்னி ஜெனரல் பாப் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.
-http://news.lankasri.com