வாஷிங்டன் : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை, வேரோடு அழிக்கப் போவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சபதம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக, கடந்த மாதம் பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளில் இருந்து, யாரும் வருவதற்கு, அவர் விதித்த தடைக்கு, அந்நாட்டு கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு : இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், டொனால்டு டிரம்ப் பேசியதாவது: நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. அரசியல் ரீதியில் சரியான போர்களில் நாம் ஈடுபட்டு வந்திருக்கிறோம்.
சமீபகாலமாக, போரில் நாம் வெல்வது கிடையாது. வர்த்தகத்தில் வெற்றியை நழுவ விட்டு வருகிறோம். மாறாக, இனி, எல்லாவற்றிலும் வெற்றிகளை அடையப் போகிறோம். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை வேரோடு அழிக்கும் வகையிலான திட்டத்தை தயாரிக்கும்படி, ராணுவ அமைச்சர் ஜிம் மாட்டிசிடம் கூறியுள்ளேன்.
அமெரிக்க ராணுவத்தை மாபெரும் வல்லமை பொருந்தியதாக உருமாற்றும்படியும் வலியுறுத்தி உள்ளேன். நம் வலிமை மூலம், அமைதியை ஏற்படுத்துவோம். நம் ராணுவம், மிக மோசமான நிலையில் உள்ளது. உலகில் இல்லாத வகையில், சிறந்த ஆயுதங்களை கொண்டதாக நம் ராணுவ கட்டமைப்பை பலப்படுத்துவோம்.
அதிநவீனமான, சிறந்த ஆயுதங்களை நம் ராணுவம் பயன்படுத்தப் போகிறது. சிரியாவிலும் பிற பகுதிகளிலும், அகதிகள் பாதுகாப்பாக தங்கும் வகையில், பாதுகாப்பு மண்டலங்களை ஏற்படுத்த விரும்புகிறோம். அமெரிக்காவை நேசிக்கும் மக்களே நமக்கு தேவை.
நம் பாரம்பரியத்தையும், நம் நாட்டையும் கொண்டாடும் மக்களை விரும்புகின்றோம். எல்லாவற்றிலும் சிறந்த மக்களே நமக்கு தேவை. கெட்ட எண்ணங்கள், யோசனைகள் உள்ளவர்கள் நமக்கு தேவை இல்லை.
புத்துணர்வு : அமெரிக்காவில் மீண்டும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் புத்துணர்வுடன் செழித்தோங்கும். உலகளவில் பணக்காரர்கள், தங்களுக்காக அனைத்தையும் செய்து கொள்கின்றனர்.
தொழிலாளர் வர்க்கத்தினருக்காக, பணக்காரர்கள் எதுவும் செய்வது கிடையாது. உண்மையான அமைதி, செழுமையை பெறுவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. நம் எல்லைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
நம் தொழிலாளர்களுக்கு உரிய பாதுாப்பை வழங்க வேண்டும். அமெரிக்காவின் சிறு நகரங்களில், நம்பிக்கையை, வாய்ப்புகளை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். பணி இடங்களில், பெண்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
-http://www.dinamalar.com