அரசியல் தீர்வுப் பயணத்தில் தொடரும் இழுத்தடிப்புகள்!

maithiri_ranil_001நாட்டில் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கப்படும் சிக்கல், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியாதிருப்பதாகும்.

இதன் விளைவாக முப்பதாண்டுகளுக்கும் மேலான யுத்தமொன்றையும் நாடு அனுபவித்தது. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு கிட்டும் என மக்கள் எதிர்பார்த்த போதும் சாதகமான சமிக்ஞை எதனையும் இன்றளவும் காண முடியவில்லை.

மஹிந்த ராஜபக்ச தமது பதவிக் கால இறுதிக் கட்டத்தில் கூட 13+ பற்றியெல்லாம் பேசிக் கொண்டே காலம் கடத்தினார். எதிர்பார்ப்புகள் வெறும் கானல்நீராகவே கடந்து போனது. மக்களின் வெறுப்பு, அதிருப்தி அனைத்தும் ஒன்று திரண்டதன் பயனாக 2015ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

பிரதான இரண்டு கட்சிகளுடன் சிறிய, சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசு அல்லது நல்லாட்சி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தன. இந்த அரசாங்கமும் இன்றளவும் கூறி வருவது தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு விரைவாகப் பெற்றுத் தரப்படுமென்பதேயாகும்.

இவர்கள் கூறும் ‘விரைவான’ என்பதற்கு எவ்வாறான அர்த்தத்தைக் கொள்ள வேண்டுமென்பதே மக்கள் முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

இவ்வாறானதொரு நிலையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது புதிய அரசியலமைப்பை தயாரிப்பதன் மூலமாகவே தேசியப் பிரச்சினைக்கு விரைவான தீர்வைக் காண முடியுமெனவும் இந்தச் சந்தர்ப்பத்தை நாடு நழுவ விடக் கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பு உட்பட சில விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே ஜயம்பதி விக்ரமரட்ன மேற்கண்டவாறு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

அரசியலமைப்பை எவ்வளவு விரைவாக தயாரிக்க முடியுமோ அதன் மூலமே தீர்வை நோக்கி விரைய முடியும் என்பதை தொட்டுக்காட்டியிருக்கிறார் அவர்.

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், பிரதான எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈ. பி. டி. பி. உட்பட சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளும் அரசியலமைப்பை தயாரிப்பதற்கு சார்பாக சாதகமான போக்கை வெளிப்படுத்தி இருக்கின்றன.

இவ்வாறானதொரு அரிய சந்தர்ப்பம் மற்றொரு தடவை கிடைக்கப் போவதில்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது என்று ஜயம்பதி விக்ரமரட்ன ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் அரசியல் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களை நாடு இழந்துள்ளது. 1972ல் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்ட போதும் அதன் பின்னரும் பல சந்தர்ப்பங்களை இழக்க நேரிட்டுள்ளது.

முன்னைய அரசியலமைப்புகள் ஒன்றிலேனும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஆர்வம் காட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

கடந்த கால அரசுகள் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பில் கண்டு கொள்ளாத் தன்மையுடனேயே செயற்பட்டு வந்ததை மறுதலிக்கவியலாது. வெறும் கண்துடைப்பு வார்த்தைகளைக் கூறிய வண்ணம் சமாளிப்புகளையே கையாண்டனர்.

பொதுவாகக் கூறுவதானால் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதிலேயே சகல அரசுகளும் செயற்பட்டன.

இன்றைய நல்லாட்சி ஆரம்பித்த கையோடு சில அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் காலப் போக்கில் அவை மந்த கதியில் பயணிப்பதையே அவதானிக்க முடிகிறது.

நல்லாட்சி அரசாங்கம் அதன் பதவிக் காலத்தில் இரண்டு வருடங்களை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது பாதி தூரம் பயணித்து விட்டது.

மீதமுள்ள தூரம் விரைந்தோடும் நிலையில் அரசின் தாமதப்போக்கு கவலை தரக் கூடியதாகவே உள்ளது.

பாராளுமன்றம் ஏகமனதாக இணங்கி அரசியலமைப்புச் சபை அமைக்கப்பட்டது. அடுத்து வழிநடத்தல் குழுவை அமைத்து அதன் கீழ் உப குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், அரசியலமைப்பில் முதல் வாசகம் கூட எழுதப்படவில்லை. இதனிடையே தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் சக்திகள் தமது சந்தர்ப்பவாத அரசியலை ஆரம்பித்து விட்டன.

இந்த நாடு பிளவுபடுவதை எந்தவொரு இனமும் விரும்பவில்லை. அனைத்துத் தரப்பினரும் ஜனநாயக நீரோட்டத்திலிருந்தே சிந்திக்கின்றனர். அப்படியான நிலையில் கூட இந்த சந்தர்ப்பவாதிகள் நாடு பிளவுபடப் போவதாக கூக்குரலிடுகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் இதனை ஆயுதமாகப் பயன்படுத்த முனைகின்றனர்.எந்தப் பொய்யையாவது சொல்லி, இல்லாத பிசாசைக் காட்டி அரசுக்கு எதிராக மக்களை தூண்டி ஆட்சியை கவிழ்ப்பதே சந்தர்ப்பவாதிகளின் ஒரே இலக்காகும்.

ஒரு இடதுசாரி அரசியல்வாதிகூட ஆட்சியைக் கவிழ்க்க கனவு கண்டு கொண்டிருக்கிறார். இந்த இடதுசாரி அரசியல்வாதிக்கு மக்களிடமிருந்து நூறு வாக்குகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

பிறிதொரு சக்தியின் தயவில் தொங்கி நிற்கும் இவர்களின் எதிர்பார்ப்புதான் ஆட்சிக் கவிழ்ப்பு. ஆனால் பெரும்பாலான மக்கள் ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்கவில்லை.

சிலர் ஒவ்வொரு விடயத்தையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றனர். பெரும்பான்மை இனத்தவர்க்கே அனைத்தும் கிட்ட வேண்டும்.

தாங்கள் போடும் பிச்சையில் சிறுபான்மைச் சமூகம் வாழ்ந்தால் போதுமென்பதே அவர்களின் குறிக்கோளாகும்.

இந்த மனநிலையிலிருப்போருக்கு சாதகமாக அரசு ஒருபோதும் செயற்பட மாட்டாது என்பதை கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் அரசு காலம் கடத்தாமல் புதிய அரசியலமைப்பை துரிதப்படுத்தி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவசிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும். அந்தத் தீர்வின் மூலமாக நாடு வளமானதாகவும் செழிப்பானதாகவும் மலர முடியும்.

-http://www.tamilwin.com

TAGS: