சர்வதேசத்தை மட்டுமல்ல தமிழரையும் வென்றால்தான் நல்லாட்சி!

maith_sambஎதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சக்திகளால் மிக ஆழமாக சிந்திக்கத் தூண்டுவதாக நோக்க வேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் பாரிய நம்பிக்கை மீது ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், தமிழினத்தின் மீதான கொடுமைகள் இந்த ஆட்சியிலுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அவரது இந்த உரை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மன அழுத்தங்களை வெளிப்படுத்துவதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

முப்பது வருட கால யுத்தத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வட புலத்தில் உயிரிழந்துள்ளதை மீள நினைவூட்டியிருக்கும் சம்பந்தன், இந்த யுத்தத்தில் மோசமான யுத்த மீறல்கள் இடம் பெற்றிருப்பதை எந்தவிதத்திலும் மூடி மறைக்கவோ, மறுத்துரைக்கவோ முடியாதென்பதை வலியுத்திக் கூறியுள்ளார்.

இராணுவம் அரச படை என்பதற்காக யுத்த மீறல்களை நியாயப்படுத்த முடியாது.

இராணுவத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான நீண்டகால கசப்புணர்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், இந்தப் பாரிய பொறுப்பு அரசின் மீதே தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

யுத்தத்தின் போது களத்திலுள்ள படைவீரர்கள் மேலிடத்து உத்தரவுக்கமையவே செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் அந்தப் படை வீரர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டையோ, காழ்ப்புணர்ச்சியோ காட்ட முடியாது.

ஆனால் படைவீரர் தனிப்பட்ட ரீதியில் குற்றமிழைப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

எண்ணிலடங்காத பெண்களும், இளம் யுவதிகளும் சில சந்தர்ப்பங்களில் பள்ளி மாணவிகள் கூட பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அவ்வாறான தகாத செயற்பாடுகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீதும் அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் கடப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசாங்கத்தின் சார்பில் யுத்தம் புரிந்த இராணுவ வீரர்களை நாம் எந்தவிதத்திலும் குற்றவாளிகளாகக் காண முடியாது.

களத்திலிருந்து போராடிய அவர்கள் தமக்கு இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாகவே காணப்பட்டனர். இப்போது யுத்தம் முடிந்து விட்டது.

படையினருக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான கசப்புணர்வுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், கடந்த காலத்தில் இராணுவம் உட்பட படைகளில் தமிழர்களும் உள்வாங்கப்பட்டிருந்தது போன்று எதிர்காலத்திலும் படைகளில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்கப்படாத ஒரே நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழும் போது அனைவருக்கும் உரிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டியது நியாயமானதே ஆகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரம் சரிசமமானதாகவும், நேர்மையானதாகவுமே இருக்க வேண்டும். கடந்த காலத்தை முன்வைத்து யார் சரி யார் பிழை எனத் தேடிக் கொண்டிருக்க முடியாது.

தவறென்று பார்த்தால் இருதரப்பும் தவறே, சரியெனப் பார்த்தால் அதிலும் இருதரப்பும் சரியானதாகவே நோக்க வேண்டியுள்ளது.

நல்லாட்சிப் பயணத்தை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வரும் நிலையில் தமிழ் மக்கள் தொடர்பிலும் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பிலும் அரசாங்கம் சரியான திசையில் பயணிக்க வேண்டியுள்ளது.

மீண்டும் பின்னோக்கிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

நல்லாட்சியிலும் ஆங்காங்கே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக கடும் விசனத்தை வெளிப்படுத்தி இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்களை மீண்டும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட வேண்டாமெனவும் தமிழர் அபிலாஷைகளை மதித்து உரிய தீர்வுக்கான வழியைத் திறக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

காணிவிடுவிப்பு, காணாமற் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட ஒட்டு மொத்த உறுதி மொழிகள் விடயத்தில் எதிர்பார்த்தளவு சாதகமான போக்கு காணப்படாமையால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே தமிழ் மக்கள் உணர்கின்றனர்.

அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கைங்கரியத்தில் அரசு ஈடுபட முனையக் கூடாது.

நல்லாட்சி அரசும் தான் நம்பிக்கை இன்னமும் வீண் போகவில்லை எனக் குறிப்பிட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் மக்கள் விவகாரத்தில் அரசு பெரும்பான்மைச் சமூகத்தின் மனங்களை வென்றெடுக்கத் தவறிவிட்டதாகவும் இந்த விடயத்தை அரச மேல்மட்டம் சமயோசிதமாக கையாள வேண்டிதன் தேவைப்பாட்டையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஏனெனில் சர்வதேசம் இலங்கை மீதான சந்தேகப் பார்வையை முற்றுமுழுதாக அகற்றிக் கொண்டதாகக் கொள்ள முடியாது. இன்னமும் கால அவகாசங்களும் காலக்கெடுகளும் விதித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழ் மக்களின் வேதனைகள் அகற்றப்பட வேண்டும். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், நிம்மதியாக அச்சமின்றி வாழும் சூழ்நிலையும் உறுதி செய்யப்பட வேண்டும். அதனைச் செய்யாதவரை அரசு மீதான நம்பிக்கை உருவாகப் போவதில்லை.

30ஆண்டு கால அவலத்திலிருந்து மீட்சி பெற வேண்டுமென்பதற்காகவே தமிழ் மக்களும் இந்த நல்லாட்சிக்கு தமது ஆதரவை வழங்கினர். அந்த எதிர்பார்ப்பு, அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடப்பாட்டை இந்த அரசு கொண்டுள்ளது.

சர்வதேச மயமாக்கப்பட்டுள்ள இலங்கையின் இன முரண்பாடுகள் மீதான தீர்வு சர்வதேசத்தின் கரங்களுக்குப் போயிருப்பதன் மூலம் இந்த விவகாரத்திலிருந்து இலங்கை தப்ப முடியாத நிலை உறுதியாகியுள்ளது.

இன்றைய நல்லாட்சி அரசு எந்த வகையிலாவது இன நெருக்கடிக்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடியதான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்து முயற்சித்த வண்ணமே உள்ளது.

இது விடயத்தில் சர்வதேசம் சாதகமாகவே நோக்குகின்றது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் காலம் கடத்தப்படக்கூடாது. மற்றுமொரு தடவை ஆறிய பழங்கஞ்சியாகி விடக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

மீண்டுமொருதடவை எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை நினைவூட்ட விரும்புகின்றோம்.

தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமானால் அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.

அந்த பயணத்தில் அரசு இன்னமும் எந்தளவு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்ற விடயத்தில் அரசு தன் செயற்பாடுகளை துரிதப்படுத்தி தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

-http://www.tamilwin.com

TAGS: