இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் ஒற்றை வரியுடன் அமெரிக்கா உரையாற்றியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், இலங்கை தொடர்பான எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் வெளியிடவில்லை.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளன.
இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கப் பிரதிநிதியாக, இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே இன்று உரையாற்றினார்.
அமெரிக்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கப் பிரதிநிதி நிகழ்த்தவுள்ள இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் வேண்டும் என மட்டும் கூறியமை தமிழர் தரப்பிற்கு ஏமாற்றமாக கருதப் படுகிறது.
-http://www.tamilwin.com