இலங்கையில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றி விட்டு வெளியே வந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேசத்திடம் பொய் கூறுவதாக புலம்பெயர் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருணா கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சர் மங்கள மனித உரிமை பேரவையில், பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக மேலும் கால அவகாசம் கோரியிருந்தார். ஜெனிவா சென்ற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இதனால் கோபமடைந்து அமைச்சருக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.
நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது உள்ளக பிரச்சினை.
இதற்காக ஒரு போதும் வெளிநாட்டு ஆலோசகர்கள், அல்லது வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியமில்லை. இலங்கையில் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள எங்களால் முடியும்.
பிரச்சினையை ஆராய்வதற்காக செயற்படுவது தான் அவசியம். சர்வதேசம் அதற்கு தடை ஏற்படுத்த கூடாது.
முல்லைத்தீவு, கோப்பாய் போன்ற பிரதேசங்களில் இராணுவம் தங்கியுள்ள தனிப்பட்ட வீடுகள் தொடர்பில் அரசாங்கம், இராணுவத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எனினும் வடக்கு பாதுகாப்பிற்காக இராணுவ முகாம் மற்றும் இராணுவம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஒருபோதும் வடக்கில் இருந்து இராணுத்தை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள கூடாதென்பதே எனது யோசனை என கருணா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கலப்பு நீதிமன்றம் உட்பட மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை முழுமையான செயற்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியா கூறுகின்றது.
அது ஒருபோதும் நடக்காது. எங்கள் நாட்டில் மிகவும் வலுவான நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று உள்ளது. எங்களுக்கு இலங்கை நீதிமன்ற கட்டமைப்பு மீது நம்பிக்கை உள்ளது.
போரின் போது இரு தரப்பினராலும் தவறுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் குற்றச்சாட்டு அரசாங்க தரப்பின் மீது மாத்திரமே சுமத்தப்பட்டது. அது அநீதியாகும்.
அப்படி என்றால் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குற்றம் சுமத்த வேண்டும்.
தற்போது போர் நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து இனத்தினரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர். சிங்களவர்களுக்கு வடக்கிற்கு செல்ல முடியும் தமிழர்களுக்கு தெற்கிற்கு செல்லவும் முடியும்.
தற்போது எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. தீர்மானிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தினால் மக்கள் இடையே மீண்டும் ஒற்றுமையின்மை மற்றும் நம்பிக்கையற்ற தன்மை மாத்திரமே ஏற்படும்.
யுத்தம் நிறைவடைந்துள்ளது. முடிந்தவை முடிந்து விட்டது. மேலும் கடந்த கால விடயங்களை தூண்டி விடுவது ஏன்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு மீண்டும் யுத்தம் ஒன்று அவசியமாக இருப்பதனால் தான் தூண்டிவிடுகின்றதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக இராணுவத்தினரின் செயற்பாடு தொடர்பில் சர்வதேச அமைப்புகள் கரிசனை கொண்டுள்ளன.
தமிழர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்க சர்வதேசம் முயற்சித்து வரும் நிலையில், கருணாவின் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மற்றுமோரு வரலாற்று தவறை செய்வதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-http://www.tamilwin.com