முன்னாள் போராளிகளினால் நாட்டுக்கு ஆபத்து – கண்காணிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுரை – கருணாவின் விசுவாசம்

karuna-008வடக்கு கிழக்கில் இராணுவத்தையும் புலனாய்வுப் பிரிவினையும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்தால் நன்று. மேலும் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறித்த மாகாணங்களில் அதிகளவு கடமையில் ஈடுபடுத்தினால் நன்று.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

வடக்கு கிழக்கிற்கு பாதுகாப்பு காணப்படுகின்றது. எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினரையும் புலனாய்வுப் பிரிவினரையும் அதிகரிப்பது பொருத்தமானதாக அமையும்.

இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்களே வடக்கு கிழக்கில் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையில் அமர்த்தப்பட்ட புலனாய்வுப் பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துவதே பொருத்தமாக அமையும்.

ஏனெனில் அவர்களுக்கு வடக்கு கிழக்கின் அனைத்து மூலை முடுக்குகளும் நன்றாகத் தெரியும்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 14000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதனை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

அவ்வாறு இல்லையென்றால் மீளவும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு அழிவினை ஏற்படுத்தக்கூடும்.

முன்னாள் போராளிகளுக்கு வெளிநாட்டு தொடர்பு உண்டு. இந்த விடயங்கள் குறித்து நான் ஏற்கனவே அமைச்சர்களிடமும் கூறியுள்ளேன்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட நாட்டில் மீளவும் வன்முறை வெடிக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என கருணா தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/7sKIN2SlDiY

TAGS: