காணாமல் போனவர்களின் உறவினர்களையும், பட்டதாரிகளையும் சந்திப்பதாக கூறி அழைத்த ஜனாதிபதி பின்னர் சந்திக்காமல் சென்றுள்ள நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மக்கள் அனைவரும் நடுவீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையை ஈர்க்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆனால் வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் முடிவடைந்ததும் ஜனாதிபதி பின்வாசல் வழியாக சென்றுள்ளார்.
இதில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும், பட்டதாரிகள் சிலரும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, சந்திப்பதற்கான அனுமதியும் பெற்று சந்திக்க சென்ற நிலையில் ஜனாதிபதி இவர்களை சந்திக்காமல் சென்றுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தம்மை பார்க்காமல் ஜனாதிபதி சென்றுவிட்டார், எம்மை ஏமாற்றி விட்டார் என்றும் பலத்த கோசங்களை எழுப்பிக்கொண்டு சிவாஜிலிங்கம் உட்பட மக்கள் அனைவரும் நடுவீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொலிஸார் இவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு முயற்சித்த நிலையிலும் அது பின்னர் கைவிடப்பட்டது. எனினும் சுமார் 20 நிமிடங்கள் வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com