எங்களது போராட்டங்களையும், ஆதரவு தருபவர்களையும் கொச்சைப்படுத்துகிறீர்கள். இதனால் நாங்கள் நாதியற்றவர்களாக, மனவேதனையுடன் போராடுகிறோம் என வவுனியாவில் போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 11 ஆவது நாளாகவும் தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நாங்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவோம்.
அதுவரை எமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என கேள்வி எழுப்பி ஏழாவது நாளாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கான கடிதங்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com