ஐ.நாவின் புதிய தீர்மானத்திலும் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம்

srilanka-killing-fields-new

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தில், 2015 தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்தும் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தீர்மானத்தின் நகல்வடிவம் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த நகல் வடிவத்தை பெற்றுக்கொண்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“குறிப்பிட்ட நகல்வடிவில் முன்னைய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மற்றும் விசேட அறிக்கையாளர்களுக்கு அரசு அளித்துள்ள ஒத்துழைப்பை இந்த ஆவணம் வரவேற்கின்ற அதேவேளை இன்னமும் முன்னேற்றங்கள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தொடர்ந்தும் அறிக்கையிடவேண்டும் எனவும் அது தெரிவிக்கின்றது” என்றார்.

இதேவேளை, முன்னைய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நீதிபதிகள் குறித்த விடயத்தை நீர்த்துப்போகச்செய்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை என முக்கிய மனித உரிமை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

வெளிநாட்டு நீதிபதிகள், குறித்த வாக்குறுதியில் பின்வாங்குவது குறித்த யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறான முயற்சிகள் எதுவும் வெற்றிபெறப்போவதில்லை. இதனால் இலங்கை குறித்த நம்பகத்தன்மையும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கலப்பு நீதிமன்றம் சாத்தியப்பாடில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். தவிர, சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டை ஏற்கமுடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: