ராமேஸ்வரம்: எங்கள் நட்புநாடு என இந்திய தலைவர்களுடன் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொள்ளும் சிங்கள சிறிசேனாதான் இப்போது அப்பாவி தமிழக மீனவரின் உயிரை கோரமாக குடித்திருக்கிற கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். சிறிசேன இலங்கை அதிபரான பின்னர் நடந்தேறிய முதலாவது தமிழக மீனவர் படுகொலை இது.
இலங்கை அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா குமராதுங்க, ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு உடந்தை என காரணம் காட்டி நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யபப்ட்டனர். இதுவரை 800-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அத்தியாயம் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த கொடூரம் தொடர்ந்தது. 2011-ம் ஆண்டு சிங்கள கடற்படை நடத்திய கொடூர தாக்குதலில் காரைக்காலை சேர்ந்த 4 மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
தாக்குதல்கள் ஓயவில்லை
இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சிறிசேன அதிபரானார். ஆனாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஓய்ந்ததாக இல்லை.
படகுகள் சிறைபிடிப்பு
இதுவரை இல்லாத வகையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை கைப்பற்றி சிறைபிடித்து வைக்கும் நடைமுறையை சிறிசேன அரசு கடைபிடித்தது. இது தமிழக மீனவர்களின் பொருளாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதல்.
மீனவர் படுகொலை
ஆனால் இந்திய மத்திய அரசோ இதுவரை சிங்கள சிறிசேன அரசை தட்டிக் கேட்காமல் நட்பு நாடு எனக் கூறிக் கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி, ஆயுத உதவி வழங்குகிறது. இப்போது இந்தியா கொடுத்த ஆயுதங்களைக் கொண்டே இந்திய குடிமகனாகிய மீனவரை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது சிங்கள சிறிசேன.
என்ன செய்யும் இந்திய பேரரசு
ஒருபுறம் இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கை குலுக்கிய சிங்கள சிறிசேனா இதோ இப்போது தமிழக மீனவரின் உயிரை குடித்திருக்கிறார்… இந்திய மத்திய பேரரசு என்னதான் செய்யப் போகிறது?