ஆப்கான் மருத்துவமனையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: 30 பேர் பலி

Taliban-Fighters1ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்தவமனைக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் முஹம்மது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையின் வாசலில் திடீரென இன்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நிலைகுலைந்தனர்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மருத்துவமனை வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் மேல் மாடியை நோக்கி முன்னேறி சென்று ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் அணியும் சீருடைகளை அணிந்தபடி, உள்ளே ஊடுருவி இருப்பதை கண்ட ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் வெளியானதும் அப்பகுதிக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனை அமைந்துள்ள பகுதி வழியாக இதர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

உள்ளே பல தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் ஹெலிகாப்டர் மூலம் வந்த ராணுவ கமாண்டோ படையினர், கயிற்றின் மூலம் தொங்கியவாறு மொட்டை மாடிக்குள் குதித்தனர்.

தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அங்கே உச்சகட்ட மோதல் நடந்து வருவதாகவும், இந்த மோதலில் சுமார் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-http://news.lankasri.com