அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா: என்ன செய்யப் போகிறது டிரம்ப் அரசு?

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் சீன பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்தால் அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் சீன பொருட்கள் மீது 45% கூடுதல் கட்டணம் விதிக்கப்போவதாக ஏற்கெனவே ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சீனாவின் வணிகத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுன் ஜீவெய் கூறும்போது, “எந்த உறுப்பினரும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறி தங்கள் சுயநலத்துக்காக செயல்பட்டால் பன்னாட்டு வர்த்தகம் என்பது அர்த்தமற்றதாகி 1930-களின் வர்த்தகப் போர் மீண்டும் ஏற்படவே வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் சீனப் பொருட்களின் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் அமெரிக்க நலன்களைக் காக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சில கூடுதல் கட்டணங்களை விதிக்க டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பரிசீலித்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் சீனாவின் வணிகத்துறை அமைச்சர் சோங் ஷான் ஊடகங்களில் தெரிவிக்கும் போது, சீனாவும், அமெரிக்காவும் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பவையாகும்.

ஆகவே இருதரப்பு வர்த்தக உறவுகள் பாதிப்படைந்தால் அது இருநாடுகளுக்கு மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்திற்கே பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.

அமெரிக்கா எப்படி பிற நாட்டு பொருட்கள், சேவைகளுக்கு தங்கள் சந்தைகளை திறந்து விட்டுள்ளதோ அதே அடிப்படையில்தான் பிற நாடுகளும் அமெரிக்கப் பொருட்களுக்கு சந்தைகளை திறந்து விட வேண்டும் என்று புதிய அமெரிக்க அரசின் வர்த்தகக் கொள்கை தீர்மானித்துள்ளது.

சீனா 26% போயிங் விமான ஆர்டர்களைப் பெறுகிறது, அமெரிக்க பீன் ஏற்றுமதியில் 56% அளவுக்கு சீனா பெறுகிறது. ஆட்டோமொபைலில் 16%-ம் ஒருங்கிணைந்த சர்க்கியூட் ஏற்றுமதியில் சீனா 15% அளவுக்கும் பெற்று வருகிறது.

2016-ல் அமெரிக்க-சீனா வர்த்தகம் 519.6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது 1979-ம் ஆண்டைக் காட்டிலும் 207 மடங்கு அதிகமாகும். ஆனால் இதில் பெரும்பாலும் பயனடைவது சீனாவே. சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் 100 பில்லியன் டொலர்கள்.

இந்நிலையில் புதிய அமெரிக்க வர்த்தகக் கொள்கை சீனப் பொருட்கள் மீது புதிய கட்டணங்களை சுமத்தினால் அது வர்த்தகப்போருக்கு இட்டுச் செல்லும் அது நன்மை செய்வதை விட தீமையையே அதிகம் ஏற்படுத்தும் என்கிறார் சீன வணிக அமைச்சர் சோங்.

-http://news.lankasri.com