இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!

vavuniya_black flagஇறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்கு,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவரும் இலங்கை அரசுக்கு, ஜெனீவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சி முறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் இன்று திங்கட்கிழமை 18வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, வவுனியாவில் வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு- கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், ‘இலங்கை அரசுக்கு இம்முறையும் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யுத்தக்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை, சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்குத்தொடுநர்கள் உடனான கலப்பு நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உடன்படாமல் முரண்டுபிடித்துவரும் இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தாமல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்கும் சட்ட ஒழுங்குகளிலிருந்து தவறிழைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

-http://www.puthinamnews.com

TAGS: