சிங்களவர்களின் குடியேற்றமாக மாறும் முல்லைத்தீவு

mullaithivuமுல்லைத்தீவு- நாயாறு பகுதியில் மிக பெரியளவில் சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாயாறு கிராமத்தை அண்டிய பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து “மாயபுர” என பெயரிடப்பட்டுள்ளதுடன் அவ்விடங்களில் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி “எல்” வலயம் என்ற பெயரில் எல்லைக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பெருமளவு நிலம் அபகரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மிக விரைவில் நாயாறு என்ற தமிழ் கிராமத்தை அண்டியுள்ள பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான ஒரு பெருமளவு விவசாய நிலத்தை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மேற்படி சிங்கள குடியேற்றத்திற்கு “மாயபுர” என சிங்கள மொழியில் பெயரும் வைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த பகுதியில் மக்களை குடியேற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகளாக நிலத்தை அளவீடு செய்யும் நடவடிக்கைள் மற்றும், இந்த பகுதிக்கு அதிகாரிகளின் வருகை போன்றன இடம்பெறுவதாக நாயாறு கிராமத்திலுள்ள மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

ஏற்கனவே கடற்படையினரின் ஒத்துழைப்புடன் நாயாறு கிராமத்தில் அனுமதியளிக்கப்பட்டதற்கும் அதிகமான சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில், புதிதாக சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக பொறுப்புவாய்ந்த தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு உன்மை நிலையை அறிந்து கொள்ள நாம் முயற்சித்தபோதும் எந்தவொரு தகவலையும் அவர்கள் வழங்கவில்லை.

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலமைகள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பாக கூடிய கவனம் எடுக்கவேண்டும்.

ஏற்கனவே மகாவலி எல் வலயம் என்ற பெயரில் பெருமளவு நிலங்களை அபகரித்து சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் நல்லாட்சி அரசாங்கமும் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: