தடைகள் இருப்பின் அதனை நீக்க வேண்டும்..! மங்களவின் கருத்துக்கு கூட்டமைப்பு பதிலடி

tna_colombo_1இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைப் பொறிமுறையே வேண்டும்.

இந்த விடயத்தில் ஒரு போதும் மாற்றுக்கருத்து கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதித்துறை பொறிமுறை தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை நியமிக்குமாறு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுவருகின்றது.

ஆனால், சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சரின் கருத்து தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசியலமைப்பில் எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பின் தடைகள் எதுவும் இருப்பின் அதனை நீக்கிக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: