மனித உரிமை ஆணையகத்துக்கு கையளிக்க வேண்டிய கோரிக்கை மனுவை தமிழ்நாடு,பாண்டிச்சேரி,கர்நாடக மாநிலங்களின் சிவில் இயக்கங்களின் சார்பில் கையெழுத்திட்ட பிரதிநிதிகள் குழு, ஐநா.பிரநிதியிடம் கையளித்துள்ளது.
சென்னையில் உள்ள ஐநா துணைத் தூதரகத்தில் இன்று 17-03-2017 காலை 11-மணியளவில் குறித்த மனு கையளிக்கப்பட்டது.
குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது,
தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை மன்றத்தின் 34ஆம் அமர்வில் இலங்கை அரசுக்கு அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற மேற்கொண்டு அவகாசம் தரக் கூடாது.
இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், மேலும் அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
ஈழமண்ணில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதோடு அங்கு தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலை கழக பாண்டிச்சேரி மாநிலத் தலைவர், லோகு. அய்யப்பன், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
-http://www.tamilwin.com