ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நாளை மறுதினம் 23ம் திகதி நிறைவேற்றப்படவிருக்கின்றது.
இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக் கூறலை ஊக்குவித்தல் போன்ற பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இத்தீர்மானம் அமைந்திருக்கின்றது.
மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் இலங்கைக்கு சாதகமாகவே அமையப் போகின்றதென்பது தெளிவாகத் தெரிகின்றது.
இலங்கைக்கு மேலும் காலஅவகாசத்தை வழங்கும் வகையிலேயே இத்தீர்மானம் அமையப் போகின்றது.
அதேசமயம் இப்பிரேரணையை இலங்கை அரசாங்கமும் இணைந்து சமர்ப்பிக்கவிருப்பதனால் அப்பிரேரணை பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியமே உள்ளது.
இலங்கை சர்வதேசத்தின் அழுத்தத்தில் இருந்து தற்காலிகமாக விடுபடுவதற்கு இத்தீர்மானம் உதவக் கூடும்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைப் பொறுத்த வரை இத்தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கப் போகின்றது.
கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் மாத்திரமன்றி தென்னிலங்கையிலுள்ள அரசுக்கு எதிரான சக்திகளும் கடுமையாக எதிர்த்து நிற்பதனாலும், அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதனாலும் யுத்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்துள்ளது.
கலப்பு நீதிமன்றப் பொறிமுறை விடயமோ அல்லது கால அவகாசம் வழங்குகின்ற யோசனையோ தமிழினத்துக்கு நிட்சயமாக திருப்தியைத் தரப் போவதில்லை.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் அமைப்புகள் இவ்விரு விடயங்களையும் வெளிப்படையாகவே எதிர்த்து நிற்கின்றன.
இவ்விடயங்களில் உறுதியான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டிய கடப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.
ஏனெனில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பிரசாரப்படுத்தியே தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் அவர்கள்.
எனினும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரத்தில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கண்டிப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்றுப் பின்வாங்கிய நிலையிலேயே இருக்கின்றது.
அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிப்பதில் இருந்தும் நழுவியே வருகின்றது.
வடக்கு, கிழக்கு தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய செயற்பாடும் ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது.
மனித உரிமைகள் பேரவையில் கையாளப்படுகின்ற இலங்கை விவகாரமானது உண்மையிலேயே இப்போது இரு துருவமாகிப் போயுள்ளது.
இறுதிப் போரின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடி வருகின்றனர்.
மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக் கூறுவதில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாதென வடக்கில் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
யுத்தக் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்குச் சாதகமான போராட்டம் தமிழ்நாட்டிலும் நடந்திருக்கின்றது.
யுத்தத்தின் போது இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றமானது நீதியைப் பெற்றுத் தருமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இப்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.
தமிழ் மக்களின் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் அவதானிக்க முடிகின்றது. அந்நாடுகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.
மறுபுறத்தில் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதை நிராகரிக்கும் உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதைக் காண முடிகின்றது.
இலங்கையில் அரசாங்கப் படையினரால் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இழைக்கப்படவில்லை என்பதை எடுத்துக் கூறுவதற்காக அரசாங்க தரப்பினர் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அதேசமயம் மனித உரிமைகள் பேரவைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக மஹிந்த அணியைச் சேர்ந்த சிலர் ஜெனீவா சென்றுள்ளனர். இப்போராட்டம் நாளைய தினம் நடைபெறவிருப்பதாகத் தெரிய வருகிறது.
படையினர் மீது மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதே மஹிந்த அணியினரின் நோக்கமாகும்.
உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் சரிவை சரிப்படுத்திக் கொள்வதற்காக மஹிந்த அணியினர் மேற்கொள்கின்ற தந்திரம் இதுவாகும்.
இவ்வாறான இருவேறு நிலைப்பாடுகளுக்கு மத்தியிலேயே காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டங்களும் வடக்கில் தீவிரமடைந்திருக்கின்றன.
பாதிப்புற்ற மக்கள் ஒருபுறத்தே நீதி கோரி நிற்கின்றனர்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இப்போதைய நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இரு தரப்பு எதிர்பார்ப்புகளும் வேறுபட்டுள்ள இவ்வாறான நிலைமையில், இலங்கை விவகாரமானது முடிவற்ற பயணத்தையே தொடர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.
-http://www.tamilwin.com