யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கியதன் காரணம் என்ன என்பது தொடர்பில் முல்லைத்தீவில் மக்களுக்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் சிவன்கோயில் வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமனற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கியதன் காரணம் என்ன..? அதன் நன்மைகள் இதுவென பொதுமக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் பொதுமக்கள் சார்பாக சமூகஆர்வலர்கள் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறுவிதமாக கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டிருந்தனர்.
குறிப்பாக இந்த அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காது என்று தெரிந்தும், கால அவகாசம் வழங்கியது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் தந்தை செல்வா மற்றும் தலைவர் பிரபாகரனினால் முடியாத காரியம் இரா.சம்பந்தரினால் முடியும் என்று நாங்கள் நம்பவில்லை என்றும் ஆதங்கம் வெளியிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாங்கள் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதனால் தொடர்ந்து முயற்சிக்கின்றோம்.
நிச்சயம் தமிழ் மக்களுக்கு நன்மை தரும் வகையில் இந்த அரசிடம் இருந்து சர்வதேசம் எமக்கு நல்ல தீர்வினை பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
மேலும் அவநம்பிக்கையுடன், சந்தேகத்துடன் எமது முயற்சிகளை நாம் முன்னெடுக்க முடியாது. இந்த இரண்டு வருடகால அவகாசத்துக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசு தீர்ப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அல்லது அதன் செயற்பாடுகளை சர்வதேசத்தின் மேற்பார்வையில் இருக்கும் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.
மக்களாகிய நீங்கள் அரசு ஒருபோதும் செய்யாது என்று அவநம்பிக்கை வைத்திருப்பதும் ஒருவகையில் நியாயம் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com