6 நாடுகளுக்கு டிரம்ப் விதித்த புதிய பயணத்தடை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

donald-trumpஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதித்த டிரம்ப்பின் உத்தரவிற்கு, ஹவாய் நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் கடந்த 6 ஆம் திகதி சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.

மேலும் இந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கும் 120 நாட்கள் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஹவாய் மாகாணம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை அங்குள்ள நீதிபதி விசாரித்து, டிரம்ப்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது ஹவாய் மாகாணம் சார்பில், வழக்கறிஞர் வாதிடும் போது, இந்த தடையினால் சுற்றுலாப்பயணிகள் வருகை பாதிக்கிறது, வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவது பாதிக்கிறது, வேலைக்கு வருவது பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.

இதை எதிர்த்து டிரம்ப் சார்பில் வழக்கறிஞர் வாதிடும்போது, புதிய பயண தடை உத்தரவு, தீவிரவாதிகள் அமெரிக்காவினுள் நுழைவதை தடை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டிரம்ப்பின் புதிய பயணத்தடை உத்தரவிற்கு காலவரையற்ற இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com