அமெரிக்காவை மிரள வைத்த வடகொரியா : சீனாவுடன் கைகோர்க்கும் ட்ரம்ப்.?

வடகொரியா மீண்டும் நவீன ரக ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சின்போ பகுதியில் உள்ள தளத்தில் இருந்து நேற்று இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக பசிபிக் கடல் பிராந்திய அமெரிக்க கடற்படையின் தலைமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவ்வாறு குறித்த இரு நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் நான்கு ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நடத்தியிருந்தது. சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் வரை இலக்கை நோக்க பயணிக்க கூடிய இந்த ஏவுகணை ஜப்பான் கடற்பரப்பில் வீழ்ந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கி அழிக்கும் நோக்கில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஏவுகணை பரிசோதனை நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சீனாவுடன் இணைந்து அல்லது தனியாக வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வட கொரியா விடையத்தில் சீனா உதவுகிறதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு உதவி செய்தால் அது நல்லதாகும். அவ்வாறு செய்யாவிட்டால் அது யாருக்கும் நல்லதாக அமையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நெருக்கமான உறவு காணப்படுகின்றது. எனினும், அண்மைக்காலத்தில் அந்த உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், தமக்கு அச்சுறுத்தலாக இருக்கம் வட கொரியாவை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி சீனாவுடன் கைகோர்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

-http://www.tamilwin.com