சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து மத்திய தரைக்கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில், சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்கா நேற்று சிரியா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது.
“சிரியா மீது தாக்குதல் நடத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என ரஷ்யா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் அமெரிக்கா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது.
சிரியாவால் இனி இரசாயன தாக்குதல் நடத்த முடியாதளவிற்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையானது “அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு” என சிரியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதனால் மத்திய தரைகடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், சிரியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க தமக்கு அறிவித்திருந்ததாக பிரித்தானியா தெரிவித்தள்ளது. எனினும், தாக்குதலில் பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
The Telegraph வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிரியா மீதான தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
“கடவுளின் குழந்தைகள் மீது இனி எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட கூடாது. உலக நாடுகள் ஒன்றிணைந்து சிரியாவில் இரத்து ஆறு ஓடுவதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
சிரியா தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்” என தெரிவித்துள்ளார். இதேவேளை, சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக பல இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல லட்சம் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகவும் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இரசாயன தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இது வரையிலும், நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சிரியா பொறுப்பேற்கவில்லை. அத்துடன், தன்னிடம் எந்தவொறு இரசாயன ஆயுதங்களும் இல்லை என சிரியா கூறிவருகின்றது.
இந்நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை சிரியாவில் இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலின் போது 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com
https://youtu.be/B_WpfKDtXFw