ஐரோப்பாவை கதி கலங்க வைக்கும் பயங்கரவாத தாக்குதல்! சுவீடன் சூத்திரதாரி கைது

isissஅண்மைக்காலமாக ஐரோப்பாவை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வந்த பயங்கரவாதிகள், தற்போது மக்கள் செறிவான பகுதிகளில் கனரக வாகனங்களை மோதவிட்டு உயிர்களை பலியெடுத்து வருகின்றனர்.

இதே பாணியில் சுவீடனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மோதல் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் 15 படுகாயம் அடைந்துள்ளனர்.

ஸ்டாக்ஹோம் நகரில் மக்கள் செறிந்து காணப்பட்ட பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வாகனத்தின் சாரதியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. எப்படியிருப்பினும் அவர் தொடர்பான அடையாளங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட குறித்த வாகனத்தில் இருந்து பல்வேறு வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றினை பொலிஸார் இன்னமும் உறுதி செய்யவில்லை.

இதேவேளை இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மிரட்டல்கள் மூலம் சுவீடனில் அமைதியின்மையை ஏற்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகமும் சுதந்திரமும் நிறைந்த நாடாக சுவீடன் எப்போதும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனரக வாகனங்களை மோதச் செய்து தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளன.

2016 ஜூலை 14 பிரான்ஸின் நைஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 86 பேர் உயிரிழந்ததுடன் 300 பேர் படுகாயம் அடைந்தனர்.

2016 நவம்பர் 28ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் 11 பேர் காயம் அடைந்திருந்தனர். தாக்குதலை மேற்கொண்ட 18 வயதான இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

2016 டிசம்பர் 19ம் ஜேர்மனியின் பேர்லின் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 49 பேர் காயம் அடைந்திருந்தனர்.

2017 மார்ச் 22ம் திகதி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 50 பேர் காயமடைந்திருந்தனர்.

2017 மார்ச் 23ம் திகதி பெல்ஜியம் Antwerp நகரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக நபர் ஒருவர் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒடியுள்ள நிலையில் படை வீரர் ஒருவரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபரிடம் இருந்து ஆபத்தான துப்பாக்கி மற்றும் கத்தி ஒன்று குறித்த நபரின் காரில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த சம்பவத்தில் ஒருவருக்கும் காயமேற்படவில்லை. அதன் பின்னர் அந்த தீவிரவாத தாக்குதல் தடுக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் பெரும்பாலானவை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகும். சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

-tamilwin.com