சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு வலுப்பட்டுள்ளமையானது, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தியத்தில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்ற தனது நீண்ட கால நலன்களை அடைந்து கொள்வதற்கான அமெரிக்காவின் திட்டத்துக்கும், இலங்கைத் தீவில் நிலையான அமைதி எட்டப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஒரு கொடிய உள்நாட்டு யுத்தத்திலிருந்து சிறிலங்கா தற்போதும் மீண்டெழுந்து வருகிறது என இக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. ஒரு நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் தீர்க்கப்பட முடியாத இன முரண்பாட்டிற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதைத் தெளிவாக ஆராயாதவிடத்தும் குறிப்பாக அந்த நாட்டின் பாதுகாப்பு உறவுநிலைகள் குறித்து ஆராயாதவிடத்து குறித்த நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டைத் துல்லியமாகக் கணிக்க முடியாது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுடன் பேணப்பட்ட உறவை விட தற்போது அமெரிக்காவானது சிறிலங்காவுடன் நல்லுறவைப் பேணிவருகிறது. சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது கடந்த அரசாங்கத்தை விடக் குறைந்தளவு அதிகாரத்தையே கொண்டுள்ளது. ஆகவே இந்த அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்தை விட மேலும் சமவலுவான வெளியுறவுக் கோட்பாட்டைப் பேணி வருகிறது என்பது உறுதியானதாகும்.
எனினும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது தனது உள்நாட்டு அரசியல் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடு ஆகிய இரண்டிலும் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் புதிய அரசியல் யாப்பை வரைதல் ஆகிய விடயங்கள் உட்பட சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. குறிப்பாக நாட்டில் இடைக்கால நீதியை ஏற்படுத்துவதாகவும் இதன் மூலம் உள்நாட்டு யுத்தத்தின் போது ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கு முயல்வதாகவும் அரசாங்கம் உறுதி வழங்கியது.
ஆனால் சிறிலங்காவின் தேசிய அரசாங்கமானது தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது. சமரநாயக்க தனது கட்டுரையில், ராஜபக்ச 2015 அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ராஜபக்ச மிகக் குறுகிய காலத்தில் அதாவது 2015 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் சிறிலங்கா அரசியலில் போட்டிபோடக் கூடிய வலுவைக் கொண்டுள்ளார்.
2015 ஏப்ரல் மாதம் சிறிலங்காவின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சீர்திருத்தம் காரணமாக ராஜபக்ச மீண்டும் நாட்டின் அதிபராக வரமுடியாது. அதாவது ஒருவர் சிறிலங்காவின் அதிபராக இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும். எனினும், ராஜபக்ச பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம். அத்துடன் ராஜபக்ச அதிபராக இருந்த போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பதவி வகித்தவரும் ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவருமான கோத்தபாய ராஜபக்ச போன்றோர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
சிறிலங்கா நாடாளுமன்றில் 225 ஆசனங்களின் பெரும்பான்மைப் பலத்தை ராஜபக்ச தன்வசம் கொண்டிருக்காவிட்டாலும் கூட, ராஜபக்சவும் அவரது கூட்டணியினரும் நாட்டின் பலம்மிக்க எதிர்க்கட்சியாக உள்ளனர். சிறிசேன அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைவடையும் நிலை அதிகரித்துள்ள நிலையில் வரும் ஆண்டுகளில் ராஜபக்சவின் ஆட்சி மீண்டும் ஏற்படாது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.
ராஜபக்ச மற்றும் சிறிசேன ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாவர். இந்தக் கட்சியைச் சேர்ந்த பலர் இன்றும் ராஜபக்சவின் விசுவாசிகளாக உள்ளனர். அத்துடன் உள்ளூராட்சி அரசாங்கத்திலும் ராஜபக்சவிற்கு அதிக ஆதரவுகள் உள்ளன. பயங்கரவாத அமைப்பை எதிர்த்து யுத்தம் புரிந்து வெற்றி பெற்ற யுத்த கதாநாயகனாகவே ராஜபக்ச மதிக்கப்படுகிறார்.
இவற்றுக்கும் அப்பால், அம்பாந்தோட்டையானது ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் சார் பலமான கோட்டையாகத் திகழ்கிறது. அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் ராஜபக்சவே காரணம் எனக் கூறப்படுகிறது.
ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் நல்லுறவு பேணப்படாத நிலையில் இதுவே இவரது அதிகாரத்துவம் அதிகரிக்கக் காரணமாகியது. 2007ன் இறுதிப்பகுதியில் சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவியானது முற்றிலும் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சீனாவிடம் அமெரிக்காவை ஒத்த கொள்கை காணப்படவில்லை.
சீனாவால் சிறிலங்காவிற்கு ஒரு பில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டது. அத்துடன் பத்து மில்லியன்கள் பெறுமதியான இராணுவ ஆயுத தளபாடங்கள் சீனாவால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டதுடன் சிறிலங்கா விமானப் படைக்கு எவ்-7 ஜெட் போர் விமானங்கள் ஆறு சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் ஐ.நா பாதுகாப்புச் சபையிலும் சிறிலங்காவிற்கு சீனா ஆதரவு வழங்கியது உட்பட ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவிற்கு சீனாவானது பல்வேறு இராஜதந்திர உதவிகளை வழங்கியிருந்தது.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது திட்டமிடப்பட்ட வகையில் பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக வைத்தியசாலைகள் மீதான திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்கள், எவ்வித பாரபட்சமுமின்றி பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் போன்ற பல்வேறு மீறல்களை சிறிலங்கா அரசாங்கப் படைகள் மேற்கொண்டன.
தமிழ்ப் புலிகளும் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியமை, போர் வலயத்தை விட்டு மக்கள் வெளியேறுவதற்கு தடை விதித்தமை உட்பட பல்வேறு மீறல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
தனது பாதுகாப்புத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதில் சிறிலங்கா எவ்வித ஆர்வமும் காண்பிக்கவில்லை. போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலர் அண்மையில் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட குறிப்பாக சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னரும் இடம்பெற்ற பல்வேறு மீறல் சம்பவங்கள் ‘சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம்’ மற்றும் ‘அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ ஆகியன அண்மையில் வெளியிட்ட ஆவணங்களில் சாட்சியங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது. பொதுமக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதுடன் அதில் விவசாயம், சுற்றுலாத்துறை, கல்வி போன்ற பல்வேறு துறைகளை விருத்தி செய்து தமக்கான வருவாயை ஈட்டிக்கொள்கின்றனர் என்பதை கடந்த ஆண்டு நான் சிறிலங்காவிற்குப் பயணித்த போது நேரில் பார்த்தேன்.
குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கில் இந்த நிலை மேலும் மோசமாகக் காணப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பைக் கொண்ட நிழல் அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் தற்போதும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பரவலாக இடம்பெறுகின்றன.
இவ்வாறான சூழல் நிலவும் சிறிலங்காவிற்குச் செல்லும் அமெரிக்க இராணுவத்தினர் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டிய தேவையுள்ளது. அதாவது இலங்கையர்களுடன் நல்லுறவைப் பேணும் தோற்றப்பாட்டை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சமூக ஊடகங்களில் பதிவுசெய்து வருகிறது. ஆனால் சிங்களவர்கள் செறிந்து வாழும் அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் வாழும் மக்களுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேணுவதை உறுதிப்படுத்த முடியாது.
‘அமெரிக்க இராணுவமானது சிறிலங்காவில் வாழும் பொதுமக்களுடன் நடந்து கொள்ளும் விதமானது குழப்பத்தை உண்டுபண்ணுகிறது’ என மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தமிழருமான செரின் சேவியர் அண்மைய நேர்காணல் ஒன்றில் விளக்கமாகத் தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவிலுள்ள பாடசாலைகளில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் தலையீடு செய்ய முடியாது. இவர்கள் பொதுமக்களுக்குப் பாதகமான வகையில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது. பொதுமக்களுக்கான வேலை வாய்ப்புக்களைத் தட்டிப்பறிக்கக் கூடாது. ஆகவே இந்நிலையில் சிறிலங்காவிலுள்ள பொதுமக்களின் விடயங்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபடும் போது மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். அதாவது சிறிலங்காவில் இராணுவமயமாக்கல் இடம்பெறுவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதாகக் காண்பிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் அமெரிக்கா ஈடுபடக்கூடாது.
மனிதாபிமான மீறல்கள் இடம்பெறும் போதும் பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகம் அதிகாரத்துவத்துடன் ஈடுபடுவதையும் அமெரிக்கா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் நம்பகமான இடைக்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் தவறினால், ஒருபோதுமே தீர்க்கமுடியாத அளவிற்கு வன்முறைகள் தொடரப்படும்.
பராக் ஒபாமா அமெரிக்காவின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகும் போது, சிறிசேன அரசாங்கத்திற்கு உந்துதலைக் கொடுக்கும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டது. குறிப்பாக சிறிசேன அரசாங்கமானது நாட்டில் அரசியல் மற்றும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அழுத்தங்களை வழங்கியது. ஆனால் பராக் ஒபாமாவின் இந்த ஆதரவானது சிறிலங்காவில் நிலையான அமைதியை எட்டுவதற்கு பயன்படவில்லை.
மாறாக, அமெரிக்கப் பாதுகாப்பு நலன்கள் சிறிலங்கா மீது ஈடுபடக் காரணமாகியது. சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களும் இன, மத மற்றும் எவ்வித பின்னணிகளுமின்றி தாம் சமமாக மதிக்கப்படுகிறோம் என நியாயமான வகையில் நம்பக்கூடிய விதமாக சிறிலங்காவுடன் பலமான பங்களிப்பை உருவாக்குவதற்கான வழிவகையை அமெரிக்கா தேடவேண்டும். சிறிலங்காவில் மீண்டுமொரு மோதல் ஏற்பட்டால் இது இந்தப் பிராந்தியத்திற்கோ அல்லது அமெரிக்கா தனது மூலோபாய நலன்களை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கமாட்டாது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுக் கோட்பாடானது வெளிப்படையாகத் தெரியவில்லை. வரும் ஆண்டுகளில் இவ்வாறான இராணுவ சார் உறவுநிலை தொடரும் போக்கு காணப்படுகிறது. இரு நாடுகளும் இணைந்து இராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் சிறிலங்காவானது தனது பாதுகாப்புத் துறையை விருத்தி செய்வதுடன் இராணுவமயமாக்கலையும் நீக்கும் போது மட்டுமே அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அடிக்கடி சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருகை தரும் நிலைமை குறைவடையும்.
அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறும் நாடுகள், இவ்வாறான இராணுவ உதவிகளைப் பெறாத நாடுகளுக்குக் கிடைக்கும் ஆதரவை விட மிகக் குறைவான ஆதரவுகளையே அமெரிக்காவிடமிருந்து பெறுவதாக அண்மைய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத்தின் பொது உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போர்க் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் என்பதுடன் போரின் இறுதிப்பகுதியில் முக்கிய பங்காற்றியிருந்தார். 2012ல், இவர் ஐ.நா அமைதிக்கான ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுக்களே அவர் இந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டமைக்கான காரணமாகும். அதே ஆண்டில் இவர் தென்னாபிரிக்காவிற்கான சிறிலங்காவின் இராஜதந்திரியாகப் பதவி வகிப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவானது தனது பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைக் கொண்டுள்ளமைக்காக, அமெரிக்காவானது சிறிசேன அரசாங்கம் மீது நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என அழுத்தம் கொடுக்கும் எனக் கருதமுடியாது. முக்கியமாக, சிறிசேன அரசாங்கத்தைப் புகழ்வதற்கும் சிறிசேன அரசாங்கத்தின் மீது அழுத்தம் போடுவதிலும் சமவலுவைப் பிரயோகிப்பதற்கு அமெரிக்கா கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக சிறிலங்காவில் நல்லாட்சி இடம்பெற வேண்டும் எனவும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் அமெரிக்கா அழுத்தத்தை வழங்க வேண்டிய நிலையிலுள்ளது. சிறிலங்காவானது சீனாவின் வாடிக்கையாளர் எனக் கருத வேண்டும் என்பதை விரும்பவில்லை. சீனாவுடனான ராஜபக்சவின் மூலோபாய உறவானது தவறானது என்றே நோக்கப்படுகிறது.
‘சிறிலங்காவானது தொடர்ந்தும் பல்வேறு நாடுகளுடன் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதற்குத் தயாராக உள்ளது{ என சமரநாயக்க தனது பத்தியில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒழுக்கமான உறவைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் புரிந்துணர்வையும் சிறிலங்காவின் அரசியல் உயர்மட்டத்தினர் கொண்டுள்ளனர்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொதுவாகத் தான் நம்பியதை விட சிறிலங்காவுடனான தனது வெளியுறவுக் கோட்பாட்டில் அமெரிக்கா தளர்வைக் காண்பித்து வருகிறது.
ஆகவே இனிவருங் காலங்களில் அமெரிக்கா சிறிலங்கா தொடர்பில் சிறந்த பணியை ஆற்ற முயற்சிக்க வேண்டும். இதற்காக நீண்ட கால நோக்குடன் கூடிய நடைமுறைக்குப் பொருத்தமான வகையில் சிறிலங்காவுடன் நல்லுறவைப் பேணுவதுடன் மனித உரிமை விடயங்கள் மற்றும் இடைக்கால நீதிப் பொறிமுறை தொடர்பில் சிறிலங்கா மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதையும் கருத்திற் கொண்டு சமவலுவுடன் கூடிய உறவுநிலையில் அமெரிக்கா ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் – TAYLOR DIBBERT
வழிமூலம் – war on the rocks
மொழியாக்கம் – நித்தியபாரதி
– Puthinappalakai
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Thayalan அவர்களால் வழங்கப்பட்டு 11 Apr 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Thayalan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
-tamilwin.com